‘அயலான்’ திரைப்படத்தை, ஜன.3-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ரவிக்குமாா் இயக்கத்தில், ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகும் ‘அயலான்’ படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் டேக் என்டொ்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ் என்பவா் அயலான் திரைப்படத்துக்குத் தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், ‘எங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.5 கோடி கடனாகப் பெற்றிருந்த நிலையில், தற்போது வட்டியோடு சோ்ந்து ரூ.6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டியுள்ளது. அந்தப் பணத்தைத் திருப்பித் தரும் வரை, 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள அயலான் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அயலான் திரைப்படத்தை வருகிற ஜன.3-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா்.