ரஜினி படத்தை இயக்க மறுத்தேனா? அல்போன்ஸ் புத்திரன் விளக்கம்!

download 66
download 66

நேரம், பிரேமம் என 2 படங்களிலேயே கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்திரன். குறிப்பாக இவரது பிரேமம் படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அல்போன்ஸ் புத்திரனுடன் பணிபுரிய ரஜினிகாந்த் விரும்பியதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : 2015-ல் பிரேமம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு, ஒரு இயக்குனராக நான் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்ய விரும்பினேன். 99 சதவீத இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண விரும்புவார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் படம் இயக்க விரும்பவில்லை என்று ஒரு நாள் இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை வந்தது. அந்தச் செய்தி வேகமாக எங்கும் பரவியது. இந்தப் பதிவு குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். பிரேமம் வெளியீட்டுக்குப் பிறகு நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன். அதை புரிந்து கொண்டு ரஜினியிடம் இது குறித்து அவர் பேசினார். அப்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இப்போது 2021 ஆகஸ்ட் மாதம் கோல்ட் படத்தின் கதையை கதாபாத்திர கலைஞர் ஒருவரிடம் சொல்லும் போது… அவர் என்னிடம் சொல்கிறார்.. அவர் ஒரு இயக்குனரிடம் பேசும் போது நான் ரஜினியுடன் படம் செய்ய விரும்பவில்லை என்று அவர் கூறினாராம். நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அதை காட்டவில்லை.

2015ம் ஆண்டு முதல் இன்று வரை இந்தப் போலிச் செய்தி என்னைத் தொந்தரவு செய்வதாக உணர்கிறேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த்துடன் நான் விரும்பியபடி படம் எடுத்திருந்தால் அந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும், மேலும் அரசுக்கு வரியும் அதிகம் கிடைத்திருக்கும்.

அப்படி நடக்காததால் நஷ்டம் எனக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், பார்வையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் தான். *இந்தக் கட்டுரையைப் போட்டவரும், இந்தப் பொய்ச் செய்திக்குப் பின்னால் இருந்த மூளையும் ஒரு நாள் என் கண்முன் தோன்றுவார்கள். நீங்கள் அந்த நாளுக்காக காத்திருங்கள். ரஜினி சாருடன் என் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நீங்கள் எப்போதும் போல எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளார்.