இந்தியன் 2 விபத்து : கமல் விசாரணைக்கு

i3 4
i3 4

லைகா நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் கடந்த 19ம் திகதி இரவு நடந்து கொண்டிருந்தபோது, கிரேன் அறுந்து விழுந்தது.

இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படக் குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மத்திய குற்றப் பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பொலிசார் கடிதம் அனுப்பி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவிட்டனர். ஏற்கனவே ஷங்கர் கடந்த 27ம் திகதி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு பொலிசாரிடம் நேரில் இன்று கமல்ஹாசன்முன்னிலையானார் . அவரிடம் விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டரை மணிநேரம் விசாரணையை முடித்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‛‛படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து எனக்கு தெரிந்த விஷயங்களை பொலிஸின் விசாரணையில் தெரிவித்தேன். இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.