இந்தியன்-2 விபத்து குறித்து கமலிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை!

1583314632 4
1583314632 4

இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப்புத்தள விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் இருந்த நடிகர் கமலிடம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் இரண்டரை மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவால் வழங்கப்பட்ட அழைப்பாணையின் அடிப்படையில் நேற்று காலை 10.15 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகர் கமல் சென்றிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முழுவதும் காணொளி பதிவு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விபத்து எவ்வாறு ஏற்பட்டது? விபத்து ஏற்படும் போது எங்கு இருந்தீர்கள்? படப்பிடிப்பில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? பாரம் தூக்கியில் அதிகளவு எடையுடைய மின்விளக்குகள் ஏன் வைக்கப்பட்டன? போன்ற கேள்விகள் விசாரணையின் போது கமலிடம் கேட்கப்பட்டது. அவற்றிற்கு கமல் தனது பதில்களை வழங்கியிருந்தார். இவை அனைத்தையும் காணொளியாகவும், எழுத்து பூர்வமாகவும் காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைக்கு நடிகர் கமல் முன்னலையாகிறார் என்ற தகவல் கிடைத்ததும் வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு கமலின் ரசிகர்கள் ஆதரவாளர்கள் என சுமார் ஐநூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி ஆணையர் வளாகத்திற்குள்ளும் கமல் ஆதரவாளர்கள் நுழைந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தனர். வளாகத்திற்கு உள்ளும் புறமுமாக கூடியிருந்தவர்களால் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் கமல் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விபரங்களை கூறுவது எனது கடமை. எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க இனி நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன்.

இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையும் நாங்கள் கேட்டுள்ளோம் என்று நடிகர் கமல் மேலும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இயக்குநர் சங்கரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த நடிகை காஜல் அகர்வாலிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அவருக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.