ரஜினி உடன் ராதாரவி திடீர் சந்திப்பு

i3 3 3
i3 3 3

நடிகர் ராதாரவி அடிக்கடி கட்சி மாறுபவர். கடைசியாக தி.மு.கவில் இருந்தார். நடிகை நயன்தாரா பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதால் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். இது குறித்து அண்மையில் ஒரு விழாவில் பேசிய அவர் “நான் போகாத கட்சி இல்லை. இனி தம்பி ராமய்யா கட்சி ஆரம்பித்தால் அதற்குத்தான் போக வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராதாரவி நேற்று குடும்பத்துடன் ரஜினிகாந்த்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருவரும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்க ஆயத்தமாகும் நேரத்தில் ராதாரவி சந்திப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரஜினி கட்சியில் சேரும் விருப்பத்தை அவர் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராதாரவி பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த கால தேர்தலின்போது ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக மேடைகளில் ரஜினியை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.