மாறுமா தெலுங்குத் திரையுலகம்

i3 2 8
i3 2 8

தென்னிந்தியாவில் சினிமா உருவான காலத்தில் சென்னைதான் அனைத்திற்கும் மையமாக இருந்தது. ஆரம்ப காலங்களில் அங்குதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன்பின் மொழி வாரியாக மாநிலங்கள் உருவான பிறகு ஒன்றன்பின் ஒன்றாக மற்ற மொழிப் படங்களும் அந்தந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன.

80களின் இறுதியில் தெலுங்குத் திரையுலகம் முற்றிலுமாக ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத்திற்கு மாறியது. மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் அதை ஆரம்பித்து வைத்தார். அதன்பின் வந்த முதல்வர் சென்னா ரெட்டி ஐதராபாத்தில் தெலுங்குத் திரையுலகினருக்காக ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ், பிலிம் நகர் ஆகிய பகுதிகளில் நிலங்களை வழங்கி தெலுங்குத் திரையுலகத்தை ஐதராபாத்திலேயே நிரந்தரமாக்கினார்.

ஆந்திர மாநிலப் பிரிவினையில் ஐதராபாத் தெலங்கானாவுக்குச் சொந்தமானது. தெலுங்குத் திரையுலகின் இரண்டாவது முக்கிய படப்பிடிப்புத் தளமான விசாகப்பட்டிணம் ஆந்திராவில் உள்ளது. தற்போது விசாகப்பட்டிணத்தை ஆந்திராவின் முக்கிய படப்பிடிப்பு நகரமாக மாற்றித் தர வேண்டும் என ஆந்திர முதல்வரிடம் தெலுங்குத் திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு தெலுங்குத் திரையுலகம் இடம் பெயர்ந்த போது வழங்கப்பட்ட நிலங்களைப் போல ஆந்திரா அரசு தற்போது வழங்க வேண்டும் என அவர்கள் விருப்பப்படுகிறார்கள். ஸ்டுடியோக்கள் அமைக்கவும், திரையுலகினர் வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் இடங்கள் தேவை என அவர்கள் கேட்கிறார்கள். அப்படி ஆந்திர அரசு வழங்கினால் தெலுங்குத் திரையுலகம் ஐதராபாத்திலிருந்து மட்டுமல்லாது விசாகப்பட்டிணத்திலிருந்தும் செயல்படும். தெலுங்குத் திரையுலகினரின் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது விரைவில் தெரியும்.