பிரியாமணிக்கு பிறந்தநாள் பரிசு

i3 1
i3 1

தமிழ் சினிமாவில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகைகள் ஒரு சிலர் தான். லட்சுமி, ஷோபா, சுஹாசினி, அர்ச்சனா, பிரியாமணி ஆகியோர் தான் 66 ஆண்டு தேசிய விருதுகளில் தமிழ்ப் படங்களுக்காக சிறந்த நடிகைகளுக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர்கள்.

2006ம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தற்போது அவர் தெலுங்கில் ‘விராத பர்வம்’ மற்றும் ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நரப்பா’ உள்ளிட்ட சில தெலுங்குப்படங்களிலும், கன்னடம், மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இன்று பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘விராத பர்வம், நரப்பா’ ஆகிய படங்களில் அவரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள்.

‘விராத பர்வம்’ படத்தில் அவர் பெண் நக்சலைட்டாக நடிக்கிறார். ‘நரப்பா’ படத்தில் தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பட போஸ்டர்களையும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாராட்டுவதோடு, பிரியாமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.