அஜித்தை அமராவதி படத்திற்கும் சிபாரிசு செய்த எஸ்.பி.பி.

NTLRG 200927135403000000
NTLRG 200927135403000000

இந்தியத் திரையுலகின் மறக்க முடியாத கலைஞனாக பெயரெடுத்தவர் மறைந்த எஸ்.பி.பி., அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும், மனித நேயத்துடனும் பழகியவர் என பலரது இரங்கல் செய்தியில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

அப்படிப்பட்டவரின் மரணத்திற்கு இதுவரையிலும் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்காத அஜித் பற்றி சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமான பதிவுகள் போய்க் கொண்டிருக்கிறது.

எஸ்.பி.பி.,யின் மகன் சரணும், அஜித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். மகனின் நண்பன் என்பதால் அஜித் முதன் முதலில் நடிகராக அறிமுகமான பிரேம புஸ்தகம் படத்தின் தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்தவர் எஸ்.பி.பி.,தான். அது மட்டுமல்ல தமிழில் அஜித் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி படத்திலும் அப்படத்தின் இயக்குனர் செல்வாவிடம் அஜித்தைப் பற்றிக் கூறி சிபாரிசு செய்தது எஸ்.பி.பி., தான் என தெரிய வந்துள்ளது.

இந்த விவரத்தை அமராவதி படத்தை இயக்கிய செல்வா எஸ்பிபிக்காக வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில் தெரிவித்துள்ளார். “நான் முதன் முதலில் இயக்கிய தலைவாசல் படத்தின் நாயகன் எஸ்.பி.,தான்.நான் இரண்டாவது படமாக அமராவதி படத்தை இயக்க ஆரம்பித்த போது அஜித்தைப் பற்றி என்னிடம் சொன்னதும் அவர்தான்,” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்

இயக்குனர் செல்வாவின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துள்ளார். அந்த மரணத்திற்குக் கூட அஜித் போகவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தான் நடிகராக அறிமுகமாகக் காரணமாக இருந்த எஸ்.பி.பி., மறைவுக்காக விஜய் போல் நேராகச் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் ஒரு இரங்கல் அறிக்கையாவது அஜித் வெளியிட்டிருக்கலாமே என்பதுதான் பலரது கருத்தாக அமைந்தது.

ஆனால், எஸ்.பி.பி.,யின் மகன் சரணைத் தொடர்பு கொண்டு அஜித் தனது இரங்கலைத் தெரிவித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஒரு அறிக்கை வெளியிடாமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை.