சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது தீபிகாவிடமிருந்து வெளியான அதிர்ச்சி தகவல்

522207
522207

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் ஆகியோரடம போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (NCB) விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில், சுஷாந்துக்குத் தெரியாமல் நடிகையும், சுஷாந்தின் தோழியுமான ரியா அவ்வப்போது போதை மருந்தைத் தண்ணீரிலும் உணவிலும் கலந்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்தநிலையில், பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உட்பட நடிகைகள் பலர், கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பார்ட்டியில் பங்கேற்றபோது, போதைப்பொருள் குறித்து வாட்ஸ்அப்பில் உரையாடியது தொடர்பான தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த உரையாடலில் தீபிகா, தனது மேலாளரிடம் போதை வஸ்து குறித்துக் கேட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் நடிகை தீபிகா படுகோனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டா ஆகியோருக்கும் கடந்த 23-ம் தேதி NCB அதிகாரிகள் அறிவிப்பு விடுத்திருந்தனர்.

இதில் ஏற்கெனவே ரகுல் ப்ரீத் சிங் ஆஜரான நிலையில் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோர் நேற்று மும்பையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாகினர்.

விசாரணையின்போது, சாரா அலி கான் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என மறுத்திருக்கிறார். இருப்பினும், தனது முதல் படமான கேதார்நாத் படப்பிடிப்பின்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் உடனான நெருக்கத்தை ஒப்புக்கொண்டார். சுஷாந்தின் பண்ணை வீடு மற்றும் விருந்துகளுக்குச் சென்றிருப்பதாக சாரா அலி கான் ஒப்புக்கொண்டார் என NCB வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே ஊடகம் குறிப்பிட்டிருக்கிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அல்லது ரியா தொடர்பாக NCB அதிகாரிகள் தீபிகாவிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. விசாரணையின்போது தீபிகா படுகோனே மூன்று முறை கண்ணீர்விட்டு அழுததாகவும்., இருப்பினும், NCB அதிகாரிகள் தீபிகாவிடம் `உணர்ச்சிவசப்பட வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்’ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இறுதியில், போதைப்பொருள்களைப் பற்றிய உரையாடல்கள் தன்னுடையதுதான் என்று தீபிகா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பிறருக்கு மருந்துகளை வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, தன்னைப் பற்றிய செய்திகளுக்கு தடை கோரி, ரகுல் ப்ரீத் சிங் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், டி.வி மற்றும் செய்தித்தாள்களில் தன்னைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.