முரளியின் தோற்றத்தில் விஜய் சேதுபதி ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

800 Movie Motion Poster
800 Movie Motion Poster

முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதியின் ‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக ‘800’ விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் முரளிதரன். இதனால், இந்தப் படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படம் கிரிக்கெட் சம்பந்தமானது என்பதால், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐ.பி.எல். லீக் போட்டியில் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.

இதில், முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இறுதியில்வருகிறது. இது இரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளதுடன் தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதேவேளை, ‘800’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவில் நடத்தப்படவுள்ளதுடன் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.