பட வாய்ப்பை நிராகரித்த நடிகரின் தாயும் ஈழத் தமிழரே!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரீஜே அருணாசலம் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எனது தாயாரும் ஈழத்தைச் சேர்ந்த தமிழர் தான். இப்படத்தின் அரசியல் காரணமாகத் தான் இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன்.

இத்தகைய சூழ்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ‘800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

‘அசுரனில்’ நடித்ததற்காக விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டேன், அவர் மீது மிகுந்த மரியாதையும் புகழும் கொண்டிருப்பதால் 800 ஐத் தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதற்கான முதல்பார்வை (Firs look) கடந்த செவ்வாய்கிழமை வெளியாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், சமூக ஊடகங்களில் மக்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியையும் இப்படத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பலரும் ‘800’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.