பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸின் அடுத்த பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜஹான்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள இந் நிறுவனம், தனது 91ஆவது தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக காஷ்மிரா பர்தேசி மற்றும் ப்ரக்யா நக்ரா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சசியிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்கவுள்ளார். இவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

‘சிவா மனசுல சக்தி’ படத்திற்குப் பின்னர் ஒரு ஜாலியான ஜீவாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றும் இதுவொரு காதல், நகைச்சுவைப் படம் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், இப்படத்தில் வி.டி.வி. கணேஷ் உட்பட பலர் நடிக்கவுள்ளதாக சந்தோஷ் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவை உள்ளிட்ட பகுதியில் நடைபெறவுள்ளதுடன் பிரபல மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மானின் இசையில் சித்தார்த் ராமசாமியின் ஒளிப்பதிவில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.