கவிதை | லொக்டவுன் | தமிழ்நதி

lokdown
lokdown

வாகனச் சக்கரங்கள்
வீதியைத் தேய்க்கும் ஓசைகள் முன்புபோலில்லை.
ஒலிப்பானின் கரீய நெடும் ஊளை….
கைகளைப் பிடித்தபடியோ
தலையைக் கோதிவிடவோ
யாருமற்ற தனியான நோயாளிகளைச்
சுமந்துசெல்கின்றன அவசர ஊர்திகள்.
முகக்கவசங்களுள் உறைந்துவிட்டன
புன்னகைகள்.
விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்ட
வீடுகளையொத்த விழிகளில்
சாவின் கருநிழலாடுகிறது.
அடைக்கப்பட்டுக் கிடக்கும்
கடைகளின் முன்
அமர்ந்திருக்கிறது பட்டினி.
தட்டிகளால் மறிக்கப்பட்ட
தெருக்களிலிருந்து
வேகவேகமாக வெளியேறிச் செல்கிறது வாழ்வு.

‘இடைவெளியைப் பேணுங்கள்’
எனும் அறிவித்தற் பலகைகள்
நினைவூட்டிக்கொண்டேயிருக்கின்றன
நம் எல்லோரையும் பிணைத்திருக்கும்
மரணமெனும்
கறுப்புக் கயிற்றை.

தமிழ்நதி

thamlnathy

தமிழ்நதி ஈழத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. கவிஞர் நாவலாசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். ‘பார்த்தீனியம்’ என்ற பிரசித்தமான நாவலையும் எழுதியுள்ளார்.