தணல்ச் செடி
சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல
மறைந்திருந்த முகத்தில்
அடுக்கியிருந்த இரகசியங்கள்
சொல்லாத எண்ணற்ற கதைகள்
கலந்தன தீயில்
கருணைமிகு உன் புன்னகை
கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்
சிறகுகளில் ஒழுகுகிறது தணல்
நெருப்பை தின்று
காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்
கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக
வெடிக்கின்றன விதைகள்
கந்தகம் சுமந்து
வெடித்துருகிய இடத்தில்
தளைத்தது தணல் மலர்களுடன்
ஒரு செடி
அனல் கமழுமுன்
சமுத்திர மௌனத்தால்
கோணிற்று உலகு
இப் பூமி உள்ளவரை
முள்போலக் குற்றுமுன்
முடிவற்ற கையசைப்பு
மற்றும்
பெருங்கடல் உறைந்த வெண் புன்னகை
¤

அலைமகன்
இறுதி விடுமுறையில்
வீடு வருகையிலிட்ட
முத்தங்களின் நினைவிலுழல்கிறது
நீ வளர்த்த நாய்
கந்தகப் புகையால்
வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள்
நுழைந்துவிட்ட அம்மா
இன்னும் திரும்பவில்லை
ஓர் நள்ளிரவில்
நமது கடலில் நீ வெடிக்கையில்
அடித்திற்றுப் பெருமின்னல்
வெற்றிச்செய்தியாய் மாத்திரம்
வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால்
இன்னும் சில முத்தங்களையேனும்
இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா
இறுதித் தேநீரருந்திய
கோப்பையில் ஒட்டியிருக்கிறது
உன் புன்னகையினொரு துளி
நீ வெடித்த கடலில்
ஒரு மண்கோப்பை நீரெடுத்து
தாகம் நிரம்பியவுன் முகத்தைப்
பார்த்துப் பேசுகிறாள் அம்மா
அலைகளில் எழுமுன் பெயரை
உச்சரிக்கா நாளில்
இப் பெருங்கடல்
வற்றிப் போயிருக்கும்
¤
தீபச்செல்வன்