தூய்மையான உணவுகளை உண்பதனால் நோய்கள் ஏற்படாது!

MDQSCNCXNEHM6AHOGGDK2OUMZI
MDQSCNCXNEHM6AHOGGDK2OUMZI

‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு’

தமிழர் பாரம்பரியத்தில் உடலை யோகநிலையில் பேண உணவுப் பழக்கங்களும், சுவாசப் பயிற்சிகளும் உதவின. இவை உடல், உள, ஆன்மீக, சமூக ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமைந்தன. பொதுவாக உணவே மருந்தாக அமைந்துள்ளமையை திருக்குறளில் தெளிவாகத் திருவள்ளுவர் எடுத்துக் காட்டுகின்றார்.

ஒருவர் அனுபவரீதியாக அறிந்த உணவுகளை உண்ணல் வேண்டும். தெரியாத உணவுகளை உண்ணுதல் ஆகாது. தூய்மையான உணவுகளை உண்பதனால் நோய்கள் ஏற்படாது எனத் திருவள்ளுவர் கூறுகின்றார்.

‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.’ (942)

மேலும் நாம் உண்ணும் உணவில் போசணைப் பெறுமானங்களின் அளவு குறைந்தாலும் நோய் வரும். இதனை இன்று மந்த போசணை என்கின்றோம். அதேபோல் அதிகளவு மாப்பொருள், கொழப்பு என்பவற்றை எடுக்கும் போதும், உடற்பருமன் அதிகரிப்பு, சலரோகம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. இவற்றை அல்லூட்டம் என்கின்றோம். இதனைத் திருவள்ளுவர் அன்று கூறியமை நோக்கத்தக்கது.

‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.’ (941)

‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து’ (944)

மிகப் பசித்து உணவு உண்ணும்போது உடலில் நோய் ஏற்படாது. இது உடற்பருமனைக் கட்டுப்படுத்தும். அனுசேப நோய்கள் ஏற்படாது. சலரோக நோய் உருவாதலைத் தவிர்க்கும். மேலும் முதலில் அதிகமாக உணவை உண்டால் பின்னர் உணவைக் குறைக்குமாறு திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இதனையே உடற்பருமனுள்ளவர்களுக்குத் தற்போது நாம் கூறும் உணவுக் கட்டுப்பாடு எனும் மருத்துவ ஆலோசனை ஆகும்.

‘அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு’ (943)

இன்று விதம் விதமான உணவுகளை மக்கள் உண்கின்றனர். கொக்காகோலோ, கேஎவ்சி, பீஸா, எரித்த இறைச்சி இவ்வாறும் மற்றும் பலவிதமான இனிப்புப் பண்டங்களும், நாகரீக மோகத்துடன் உண்ணப்படுகின்றன. தமிழர்களின் தொன்மையான உணவுப் பாரம்பரியங்கள் பழக்கத்தில் இருந்து விலகுகின்றன. இதனால் பல நோய்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஏற்பாடு இல்லை உயிர்க்கு’ (945)

அளவோடு உணவை உண்டால் நோய் வராது. உணவைப் பக்குவப்படுத்துவதில் அளவுப் பிரமாணம் அவசியமானது. இன்று பணமிகுதி உடையோர் அதிக அளவில் உணவை உண்கின்றனர். விருந்துகள் வைத்து தமக்கு வேண்டிய ஏனையவர்களையும் அதிக உணவை உண்ணும் பாரம்பரியத்தை ஏற்படுத்தி நோய்நிலைக்கு ஆளாக்குகின்றனர். திருமண மண்டபங்களில் தாராளமாக வழங்கப்படும் குளிர்களி, குளிர்பானங்கள், பாயாசம் என்பன இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அவ்வாறே அலுவலகங்கள், நண்பர் கூழாம்களின் விருந்துகளும். இதனால் நோய் ஏற்படும் என்பதனைத் திருக்குறளில் காணலாம். இதனை இன்றைய மருத்துவமும் ஆதாரமாகக் கூறுகின்றது.

‘இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்.’ (946)

எனவே உணவை அளவோடு உண்ணல் இன்பமானதாகவும், நோய் ஏற்படாத தன்மையுடையதாகவும் இருக்கும். ஒருவன் தனது தேவை தெரியாது அதிக அளவு உணவை உண்ணும்போது நோய்நிலைக்கு ஆளாகின்றான். இதனால் இன்று வைத்தியசாலைகளில் போசணை ஆலோசனைச் சிகிச்சை நிலையங்கள் அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

‘தியா வன்றித் தெரியான் பெரிது துண்மின் நோயள வின்றிப் படும்’ (947)

நோயினைத் தவிர்க்கும் வாய் நாடி என்பது நாம் உண்ணும் உணவில் இருந்தே தொடங்குகின்றது. உணவுப்பழக்கம், மருத்துவக் குணமுடைய மூலிகைகளின் பாவனை என்பன தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில் முதன்மையானது.

‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’. (948)

தமிழ் மருத்துவத்தின் விஞ்ஞான அணுகுமுறையைத் திருக்குறள் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளது. இது தமிழரின் நாகரிகத்திற்கு ஓர் ஆழமான எடுத்துக்காட்டாகும்.

தற்போது கொரோனாத் தொற்றால் உலகம் பயந்துள்ள நிலையில் மருத்துவச் சேவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை திருவள்ளுவர் சிறப்பாகக் கூறியுள்ளார்.

‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்’ (949)

நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை, நோயின் தன்மை மற்றும் குறித்த அளவு காலம் என்பன கருதி மருத்துவ சிகிச்சை நிர்ணயம் செய்யப்படும். மேலும் நோயுற்றவன், மருத்துவன், நோய்க்கான மருந்து, மருந்தினை நோயாளிக்கு நேரம் தவறாது வழங்குபவர் என நான்கும் நோய் குணப்படுத்தலில் உதவும்.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து’ (950)

தமிழர் பாரம்பரியத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் நோயினை வராது காத்தது. உணவே தான் மருந்தாக இருந்தது. அவ்வகையில் இல்லாளின் சமையல் சிறப்பே நோயுற்ற வாழ்வுக்கான சிறந்த வழியாக அமையும் என்பதனையும் திருவள்ளுவர் மேற்கூறியவாறு மிகைபடக் கூறியுள்ளார்.

‘மருந்தென வேண்டாம் யாக்கைக்கு’.

கொரோனா தடுப்பு மருந்து கேள்வி பதில்கள்
மருத்துவர். சி. யமுனாநந்தா

கொரோனாத் தடுப்பு மருந்தேற்றல் என்றால் என்ன?

கொரோனா நோய்க்கிருமி உடலில் தொற்றிப் பாதிப்பினை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சுடன் வழங்கப்படும் மருந்து.

எவ்வகையான கொரோனாத் தடுப்பு மருந்துகள் உலகில் பாவனையில் உள்ளன?

கொரோனா வைரஸின் மேற்பரப்புப் புரதத்தை ஒத்த புரதத்தை எமது உடலில் உருவாக்கி உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை நிணநீர்க்கலங்கள் மூலம் ஏற்படுத்தும் செய்திகாவு கரு அமில தடுப்பு மருந்து

கொரோனா வைரஸின் மேற்பரப்பை ஒத்த புரதத்தின் மாதிரியினாலான புரதத்தை பூச்சிகளின் கலங்களில் உருவாக்கி அதனை மீநுண் தொழில்நுட்ப மூலமும் வினைத்திறன் மிக்கதாக மாற்றிய தடுப்பு மருந்து.

சாதாரண தடிமனை ஏற்படுத்தும் அடினோ வைரசில் கொரோனா வைரசின் மேற்பரப்புப் புரதத்தை உருவாக்கக்கூடிய பரம்பரையலகுச் செய்தியினைச் செலுத்தி வீரியம் இழக்கப்பட்ட வைரசு தடுப்பு மருந்து கொவிசீல்ட் மருந்து இத்தகையது.

கொரோனா வைரசினை ஆய்வுகூடத்தில் பீற்றா புறோப் பியோ லக்டோன் என்ற இரசாயனம் கொண்டு உயர்ப்பு அகற்றப்பட்டு உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து சீனோ பாம் மருந்து இத்தகையது.

கொரோனாத் தடுப்பு மருந்துகளின் முக்கியத்துவம் யாது?

கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் குறிப்பாக சமூகத்தில் 70 வீதத்திற்கு மேற்பட்டோர் தடுப்பு மருந்தினைப் பெற்றிருத்தல் வேண்டும். இதனால் சமூகத்தில் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தலாம். கொரோனாத் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களைக் குறைக்கும். கொரோனாத் தொற்றின் நாள்பட்ட பாதிப்புகள் தடுப்பூசி ஏற்றுவதனால் தவிர்க்கலாம்.

தற்போதைய சூழலில் யாவர்க்கு கொரோனாத் தடுப்பு மருந்துக்களை செலுத்தலாம்?

18வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தலாம். கர்ப்பிணித் தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனாத் தடுப்பு மருந்துகளை தற்போதைய நிலையில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒவ்வாமை உடையவர்கள் விசேட மருத்துவக் கண்காணிப்பினைப் பெறல் வேண்டும் அன்றேல் தவிர்த்தல் வேண்டும்.

கொரோனாத் தடுப்பு மருந்து முன்னுரிமை யாவர்க்கு அளிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் பணிபுரிவோர் பொதுப்பணியில் உள்ளவர்கள் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் போக்குவரத்தில் ஈடுபடுவோர் உல்லாசப் பயணிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வயோதிபர்கள் நாட்பட்ட நோயுடையோர் குறிப்பாக சலரோக நோயாளிகள்.

கொரோனாத் தடுப்பு மருந்துகளில் சிறப்பானது யாது?

இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடியவையாய் எளிதில் பிரயோகிக்கக் கூடியவையும் சிறப்பானது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு வீரியம் இழக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, மாற்றியமைக்கப்பட்ட
அடினோ வைரஸ் தடுப்பு மருந்து என்பன பிரயோசனமானவை. ஏனைய தடுப்பு மருந்துகளும் நல்லவை. ஆனால் அவற்றினை எமது பிரதேசத்திற்கு பெற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும்.

கொரோனாத்தடுப்பு மருந்துகளின் பக்கவிளைவுகள் யாவை?

தற்போது பயன்படுத்தப்படும் கொவிசீல் தடுப்பு மருந்து ஏற்றிய பின் காய்ச்சல் தன்மை, உடல் களைப்பு, தலையிடி, தலைநோ, மூட்டு நோ என்பன மிகவும் பொதுவாக அதாவது 10 பேரில் ஒருவருக்கு மேல் ஏற்படலாம்.

வாந்தி, தொண்டைநோ, காய்ச்சல், இருமல் என்பன 10 பேரில் ஒருவருக்கு ஏற்படலாம். தலைச்சுற்று, உணவில் விருப்பமின்மை, வயிற்றுநோ என்பன 100 பேரில் ஒருவருக்கு ஏற்படலாம்.

கொரோனாத் தடுப்பு மருந்து ஏற்றும்போது அவதானதாக இருக்க வேண்டிய முறைகள் யாவை?

கடுமையான வேலைகளை இரு நாட்களுக்கு மேற்கொள்ளக்கூடாது. மாமிச உணவு, மீன் என்பவற்றை இரு நாட்களுக்கு தவிர்த்து தாவர உணவுகளை உண்ணல் நல்லது. மதுபானம் அருந்துபவர்கள் இரு நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். ஏனைய தடுப்பு மருந்துகளை உடனடியாக ஏற்றக்கூடாது. குருதித்தானம் வழங்கலையும் ஒரு மாதங்களுக்கு தவிர்க்கவும்.

கொரோனாத் தடுப்பு மருந்துகளினால் ஏற்படும் சமூக நீர்ப்பீடனம் அல்லது மந்தை நீர்ப்பீடனம் என்றால் யாது?

சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடலில் கொண்டுள்ள தன்மை மந்தை நீர்ப்பீடனம் எனப்படும். இது இயற்கையான தொற்றுப் பரம்பல் அதிகரித்த நிலையிலும், தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட சூழலிலும் ஏற்படும். கொரோனாத் தொற்றைப் பொறுத்தவரையில் சமூகத்தில் 70 வீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஏனையவர்களும் சமூக இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், பயணங்களை குறைத்தல் மூலம் கொரோனாத் தொற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.

கொரோனாத் தொற்றின் அபாய நிலையை எவ்வாறு கண்காணிக்கலாம்?

கொரோனா வைரசான சார்ஸ் – கோவ் -2 தொடர்ச்சியாக உருமாற்றமடைந்து வருகின்றது. இதன் மேற்பரப்புப் புரதத்தில் ஏற்படும் உருமாற்றம் சிலவேளைகளில் அபாயமான தொற்றாக அமையலாம். எனவே கொரோனா வைரசின் இரசாயன மூலக்கூற்று மாற்றங்களை தொடர்ச்சியாக ஆய்வுகூடத்தில் அவதானித்தல் வேண்டும்.

உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் எவ்வாறு பாதிப்பை உண்டாக்கும்?

வேகமாகப் பரவி அதிகமானவர்களில் தொற்றை ஏற்படுத்தலாம். கடுமையான நோய் நிலையினை ஏற்படுத்தலாம். சாதாரண பரிசோதனை முறைகளில் கண்டறிய முடியாது போகலாம். சிகிச்சைக்கு குணமடையாத நிலை வரலாம். உடலில் ஏற்பட்ட கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியினை இல்லாது செய்யலாம். மேலும் தீவிரவாத நாடுகளால் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். எனவே தடுப்பு மருந்துகள் மூலம் கொரோனா வைரசு சமூகத்தில் பரவுவதை தடுக்கலாம்.

கொரோனாத் தடுப்பு மருந்து வழங்குவதில் சமத்துவத்தன்மை பேணல் என்றால் என்ன?

உலகில் சகலருக்கும் தடுப்பு மருந்து கிடைக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். குறித்த சிலருக்கு மட்டும் தடுப்பு மருந்து செலுத்துவது தவறான அணுகுமுறையாகும். சமூகத்தில் குறித்த பகுதியினர் தவிர்க்கப்பட்டால் அவர்களிடம் இருந்து மாறுபாடான கொரோனாப் பரம்பல் ஏற்படலாம்.