மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரம் பூ!

p51a 1527253866
p51a 1527253866

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.

இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும்.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லீட்டர் நீரில் இட்டு, 200 மி.லீ ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லீ அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.