இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிகள்!

201604021056127378 Grandma remedies control for heart disease SECVPF
201604021056127378 Grandma remedies control for heart disease SECVPF

இதய நோய் என்றதும், பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரிகிறது. அதனால், இதயம் சம்மந்தமான விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.

உடல் முழுவதும் ரத்தம் செல்ல, அதற்குண்டான வேலையைச் செய்கிறது நம் இதயம். இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது.

ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்குச் செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம். பக்கவாதம் கூட ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் வருகிறது.

ரத்தம் தடைப்படுவதால், இதயத் தசைகள் செயலிழக்கின்றன. இதற்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக்
கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் ஆகியவையே இந்த மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கின்றன.

இதய நோய்களைத் தடுக்க இரண்டு விதமான முறைகள் கட்டாயமாக பின்பற்றப்படுகின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியே இருதய ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றன.