சிறுநீரகக் கற்களை கரைக்க எளிய வழிமுறை

201803240816271448 reason kidney stones for males SECVPF
201803240816271448 reason kidney stones for males SECVPF

வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் உருவாவது வழக்கமான ஒன்றுதான்.

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கல்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரிலிருந்து வெளியேறிவிடும். சில நேரங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும்.

அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புக்கள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் ஏற்படும் நீர்வறட்சி, தவறான உணவு முறைகள், சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கல்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். அடிவயிற்றில் வலி ஏற்பட்டு பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக்கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும்.

சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை சரியான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை எந்தவித அறுவை சிகிச்சையும் இல்லாமல், ‘ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி’ எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி, கல்லின் மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்துவிடலாம்.

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவுகளை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் சிறுநீரகக் கற்கள் சுலபமாகக் கரைந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம்.