கண்களின் மூலம் கொரோனா பரவுமா?

kan
kan

கொரோனா இன்று உலகமெங்கும் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் கொரோனா பற்றிய செய்திகள்தான். கொரோனா’ வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கண்களைப் பாதுகாப்பாக வைப்பது குறித்த தகவல்களை உலகெங்கும் உள்ள கண் மருத்துவச் சங்கங்கள் வெளியிட்டு வருகின்றன.

கண்ணில் சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா ?

மெட்ராஸ் ஐ’ என்று சொல்லப்படும் கண்வலி ‘அடினோ’ வைரஸால் ஏற்படக்கூடியது. இதுபோன்ற கண்சிவப்பு ‘கொரோனா’ வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்குமா என்பது சிலரது சந்தேகம். ஒரு வேளை சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா என்றும் கேட்கிறார்கள்.

இதுவரையிலும் ‘கொரோனா’ வைரஸ் தொற்றின் அறிகுறியாகக் கண் சிவப்பு வரையறை செய்யப்படவில்லை. பொதுவாகக் கண்ணில் சிவப்பு, கண் இமை வீக்கம், கண்ணில் பீளை தள்ளுதல், கண் இமை ஒட்டிக்கொள்ளுதல், நீர் வடிதல் போன்ற பிரச்சினை ஏற்பட்டால் கண் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது நல்லது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவர் தும்மும்போதோ இருமும்போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் எதிரில் இருப்பவர்களின் கண்ணில் விழும்போது அவர்களுக்குக் கண்வலியுடன் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்தும் மிக அதிகமாக இருக்கிறது. எனவேதான் அரசு அனைவரையும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்துகிறது. இதன் மூலம் நோய்த் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

ஒருவருக்குக் கண் சிவப்புடன் காய்ச்சலோ, சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளோ இருந்தால் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு உடனே மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

மேலும், வீட்டில் உள்ள மேல்நிலை நீர்த் தொட்டி நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யாமல் இருக்கும்போது நீர் அசுத்தமாகி அதில் தொற்று ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்கள் இந்த அசுத்த நீரால் கண்களைக் கழுவும்போது கண்ணில் தொற்று ஏற்பட்டு கண்ணில் சிவப்பு உருவாகும் ஆபத்து இருக்கிறது. எனவே, நீர்த்தொட்டிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்வது நல்லது. வீட்டில் இருக்கும் இந்தக் காலத்தில் அதைச் செய்யலாம்.