ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி!

11 6
11 6

‘மயக்கம் என்பது எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயமல்ல. ‘‘ஏதேனும் உடல்நலக் குறைவால் மூளைக்கும், இதயத்துக்கும் செல்கிற ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தடைபடும் போது மயக்கம் ஏற்படுகிறது. இதில் சுய நினைவு இழந்த மயக்கம், சுய நினைவு கொண்ட மயக்கம் என இரண்டு வகைகள் உண்டு.

நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ஊட்டச்சத்து குறைபாடு, உள்காது நரம்பு பாதிப்பு, கண் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, ரத்த குழாய் அழுத்தப்படுவதால் தடைபடுகிற ரத்த ஓட்டம், புகை பிடித்தல், மது அருந்துதல் மாதாவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக உதிர போக்கால், ரத்தசோகை ஏற்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் மயக்கம் ஏற்படும். இவை எல்லாம் சுயநினைவு கொண்ட மயக்கமாகும்.

வலிப்பு, பக்கவாதம், மூளையில் ஏதேனும் தீவிர பாதிப்புகளால் ஏற்படுவது சுய நினைவிழந்த மயக்கம். இந்த மயக்கம் தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லக் கூடிய அளவு தீவிரமானது’’

ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்:

முதலுதவி

01. வலிப்பினால் மயக்கம் அடைந்தவரைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கட்டுப்படுத்தக் கூடாது.

02. வலிப்பு வந்தவர் மயக்கம் அடையும் வரை அவரை விட்டு விட வேண்டும். அவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்கக் கூடாது.வலிப்பு வந்தவர் மயக்கத்தில் இருக்கும் போது வாய் வழியாகச் சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது.

03. கைகள், கால்கள் அசைவது நின்றவுடன் சில நிமிடங்கள் இடது புறமாகப் படுக்க வைத்து வாயிலிருந்து வடியும் திரவத்தை முழுவதுமாக வெளியேற்றி விட வேண்டும்.

04. மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் வலிப்பு நிற்காத பட்சத்தில் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

05.மயக்கம் அடைபவரின் செயல்களை நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் நெஞ்சுப்பகுதியில் கைகளை வைத்த படி மயங்கி விழுகிறாரா எனக் கவனிக்க வேண்டும். அவ்வாறு நெஞ்சில் கை வைத்து மயக்கம் அடைந்தால் தரையில் படுக்க வைப்பதுடன், தலையை ஒருபக்கமாகச் சாய்த்து வைக்க வேண்டும். மயக்கம் அடைந்தவரின் நாடித்துடிப்பைக் கவனிக்க வேண்டும்.

06.மயக்கம் அடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயலலாம். திடீரென தண்ணீர் தெளித்தால், முகத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்படும். இது மயக்கம் தெளிய உதவும்.

07.ஐந்து நிமிடங்களுக்கு மேல் மயக்கம் தெளியாமல் இருந்தாலோ, மயக்கம் அடைந்தவரின் இதயத் துடிப்பு குறைந்தாலோ உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.