நகத்தின் அதிசயம்: வியக்க வைக்கும் உண்மைகள்

hand nails001
hand nails001

நகப் பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். அதன் மூலம் தொற்றுகள், அழுக்குகள், ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கலாம். ஆனால் கீழ்காணும் விஷயங்களை நீங்கள் செய்தால் உங்களுக்கு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

நகம் கடித்தல்

மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று நகம் கடிக்கும் பழக்கம். இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது.

மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வு மனப்பான்மை, ஒத்துப்போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சிறியவர்களில் இருந்து பெரிய வர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள்.

நகம் கடிப்பதிலிருந்து விடுபட

குழந்தைகள் கடிக்கக்கூடிய வளையம், பந்து போன்ற பொருட்களைக் கைகளில் கொடுக்கலாம்.

மருந்துக்கடையில் கிடைக்ககூடிய கசப்புத்தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவ தொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.

செயற்கை நகப்பூச்சுகளால் ஏற்படும் பிரச்னைகள்

மற்ற அழகு சாதனப் பொருட்களில் எந்த அளவுக்கு ரசாயனங்கள் உள்ளன என்று பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால், நகத்தை அழகுபடுத்த பயன்படும் நெயில் பாலிஷ் முழுக்க முழுக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் எனத் தெரிந்தும் துணிந்து பயன்படுத்துகிறோம்.

கண்ணைக் கவரும் விதமாக பல வண்ணங்களில் அடர்த்தியாக இருக்கும் நகப்பூச்சைப் பயன்படுத்துவதால், அதில் உள்ள வேதிப்பொருட்கள், நகங்கள், தோல், நுரையீரல் மற்றும் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்தும்.

நகப்பூச்சை அதிக அளவு பயன்படுத்தும்போது, நகத்தைச் சுற்றியும், தசைப்பகுதியையும் பாதித்து நகங்களின் பளபளப்புத் தன்மை இழந்து, எளிதில் உடையும்படி ஆகிவிடும். அவை நகத்தை மெலிதாக்கி, தொற்றுக்கிருமிகள் ஊடுருவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

நகங்களை பராமரிக்க

தலைமுடி, முகம் மற்றும் உடற்பகுதியை கண்டிஷனர் போட்டு கவனித்து வருவதைப் போலவே நகங்களையும் தொடர்ந்து கவனித்து வர வேண்டியது அவசியமாகும்.

நகங்களுக்கான கிரீம்களை தடவி விட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து அவற்றை ஈரப்பதமாக வைத்திருக்கவும். இவ்வாறு வைத்திருப்பதால் நகங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் உறுதியாகவும் வைத்திருக்க முடியும்.

நல்ல தரமான நகவெட்டிகளை வாங்கி நகத்தை வெட்ட வேண்டும். இது நகம் மற்றும் தோலின் பிற அடுக்குகளை பாதிக்காமல் இருக்கும்.