அவர்களும் வாழ்ந்துவிட்டு போகட்டும் விடுங்கள்

56
56

கிளிநொச்சி புகையிரத கடவை அருகே சென்று கொண்டிருந்தேன். சரியாக புகையிரத கடவையை தாண்டியதும். ஏதோ விபத்து நடந்த தோறணையில் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.

என்னவென்று சென்று பார்த்தால் ஒரு பழைய சைக்கிளைப் பிடித்தவாறு எலும்பும் தோலுமாக சாரம் அணிந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சைக்கிள் கெரியலில் அவரது 6 வயது மகன் கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தான். அவனது குதிகாலின் பின்பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டேயிருந்தது.

“என்ன நடந்தது அண்ணன்..” என்றேன்.

“சைக்கிள ஓடிட்டு வரும்போது பின்னால வேகமா வந்த மோட்டசைக்கிள் காரனுகள், என்ட சைக்கிள இடிக்கிற மாதிரி வந்து ஓவர்டெக் பண்ணிட்டு போறானுகள் தம்பி. அந்த சத்தத்துல பயந்துபோய் கால சைக்கிள் டயருக்க விட்டுட்டான்..” என்றார் கோபம் கலந்த சோகத்துடன்.

“சரி.. ரத்தம் ஓடிட்டே இருக்கு, பக்கத்துல கிளிநொச்சி சந்தில பாமசி இருக்கு மருந்த கட்டுங்க..” என்று சொல்லிக்கொண்டே அவரது சைக்கிளை திருப்பி கொடுக்க முயன்றேன். ஆனால் அவரோ அதை காதில் எடுக்காதவரைப் போல மகனை ஏற்றியபடி சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.

நான் வெறுப்புடன்…
“அண்ணன் ரத்தம் தொடர்ந்து ஓடிட்டே இருக்கு.. உடனே மருந்த கட்டுங்க.. ஏதாவது பெரிய காயம் ஆக்கபோகுது..”
என்டு சொல்லி முடிக்கல்ல..
“அங்க கட்ட காசு வேணும் தம்பி.. வீட்ட போய் மரமஞ்சள் வெச்சு கட்டு போட்டா சரியாயிரும்…” என்று சொல்லியபடி மீண்டும் சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.

இதைக் கேட்டதுமே எனக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது. அவரை கட்டாயப்படுத்தி அருகில் இருந்த அதே டிஸ்பன்சரியில் மருந்தை கட்டி அனுப்பி வைத்தேன்..

வீடு வந்து சேர்ந்த பின்னரும்… அந்த ஏழைத் தகப்பனுடைய இயலாமை முகமும், அவரது மகனின் அழுகையும் திரும்ப திரும்ப நினைவை வருடியபடியே இருந்தது.

அன்பு நண்பர்களே.!
நீங்கள் pulsar, Fz என்றெல்லாம் பறக்கும் இதே வீதிகளில் தான்.. சைக்கிளில் குழந்தைகளுடன் பயணிக்கும் எண்ணற்ற ஏழை அப்பாக்களும், பயணிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. அவர்களும் வாழ்ந்துவிட்டு போகட்டும்.

# Dirushan Shan அவர்களின்  முகப்புத்தகத்திலிருந்து