கொத்தடிமையாக இருந்த பெண் – அமெரிக்கா வரை எப்படி சென்றார்!

608 n
608 n

குவாரி என்னும் குழிக்குள் போய் வெளியில என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரியாமல் கொத்தடிமையாக இருந்த இருளர்பெண் பச்சையம்மாள், இன்று அமெரிக்கா சென்று வந்திருக்கிறார்!

உள்ளாவூர் என்ற கிராமம், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அவ்வூரையொட்டிய சுடுகாட்டுக்கு அருகிலுள்ள இருபது குடிசை வீடுகளில் ஒன்றில் வாழ்ந்து வருபவர் இருளர் இனப்பெண் பச்சையம்மாள்.

தனது ஒன்பதாவது வயதிலிருந்து பல வருடங்கள் குவாரியில் கொத்தடிமையாக வாழ்ந்தவர் இவர். இந்த ஏழைப் பெண்ணின் அப்பா வாங்கியிருந்த கடனுக்காக, இவரின் அண்ணன், செய்யாறில் இருக்கின்ற குவாரியில் வேலைக்குப் போனார். ஓர் ஆளாக வேலை பார்த்தால், கடனைச் சீக்கிரம் அடைக்க முடியாது என்று, இவரும் இவரின் அம்மாவும் அங்குச் சென்றனர்.

பள்ளிக்கூடம் போகும் வயதில், குவாரியில் கல் உடைத்துப் போடுதல், பாறைக்குள் வெடிமருந்து வைப்பது, கழனியில் அறுவடை செய்வது போன்ற எல்லா வேலைகளையும், இவரைச் செய்ய வைத்துள்ளார்கள்.

இந்தக் குவாரி பற்றிச் சொல்கிறார் பச்சையம்மாள்… “அந்தக் குவாரி ஒரு பெரிய குழியாட்டம் இருக்கும். சின்ன வயசுலேயே அதுக்குள்ள போயிட்ட எனக்கு, எந்த வருஷத்துல இருக்கோம், என்ன வயசு ஆகுது, வெளியில என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரியாமப் போயிடுச்சு. அப்பா எவ்வளவுதான் கடன் வாங்கியிருந்துச்சு, இப்போ எவ்வளவு ரூவா கழிஞ்சிருக்குன்னுகூடத் தெரியாது. மொதலாளிக்கிட்ட கேட்டா என்னையும் அம்மாவையும் அடிப்பாங்க. அதனால கேக்க மாட்டோம். காலையில அஞ்சு மணிக்கு குவாரிக்குள்ள போயிடணும். இரவு 11 மணிவரை வேலை பாக்கணும். குவாரிக்குப் பக்கத்துலயே குடிசை போட்டுக்குடுத்து தங்க வெச்சிக்கிட்டாங்க. நெனைச்ச நேரம் தூங்க முடியாது, சாப்புட முடியாது, தண்ணிகூட குடிக்க முடியாது. ராத்திரி தூங்கலாம்னு குடிசைக்கு வந்தா பாறை வெடிச்சு குடிசை மேலயே கல்லுக வந்து விழும். தினம் தினம் பதறிக்கிட்டேதான் இருப்போம். அப்பா விபத்துல இறந்தப்ப, அவர் முகத்தைக்கூடப் பார்க்க என்னை அனுமதிக்கல.”

“குவாரியில் கொத்தடிமையாக வேலை செய்த ஒருவரைத் திருமணம் செய்துக்கிட்டேன். அவருக்கு நேர்ந்த கொடுமைகள், இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். திடீர்னு ஒருநாள் குவாரிக்குள்ள 10, 20 ஜீப்புங்க வந்துச்சு. குவாரி ஆளுங்க, எங்க ஆட்களை அடிச்சு, ‘ஓடிப்போங்க, எங்கயாச்சும் போய் ஒளிஞ்சுக்கோங்க’ன்னு கத்துனாங்க. ஆனா, நாங்க அங்கேயே நின்னுட்டோம். அப்புறம் ஓர் அம்மா ஜீப்ல இருந்து இறங்கி வந்து, ‘பயப்படாதீங்க, நாங்க உங்க எல்லாரையும் பத்திரமா அவங்கவங்க ஊருக்கு அனுப்பி வைக்கத்தான் வந்துருக்கோம்’னு சொல்லி வேன்ல ஏறச் சொன்னாங்க.”

பின்னர் ஐ.ஜே.எம் அறக்கட்டளை இவர்களுக்கு அரசிடம் விடுதலைப் பத்திரம் பெற்றுத் தந்து, அவரவரின் ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இப்போது பச்சையம்மாள், படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வாங்கிக் கொடுப்பது போன்ற தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, தங்கள் பகுதிக்குச் சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் பச்சையம்மாள். இவரின் இந்த முயற்சிக்கு மும்பையிலுள்ள, மகராஷ்டிரா மாநில பெண்கள் அமைப்பு, மனித உரிமை விருது வழங்கியுள்ளதுடன், அவர் கணவருக்கு மின்சார ஆட்டோவும் வழங்கி சிறப்பித்திருக்கிறது.

‘சன்’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய்சேதுபதி, இவர்களின் தொத்தடிமை மீட்புப் பணிக்கு உதவியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பச்சையம்மாள் கலந்து கொண்டார். கொத்தடிமையாக இருந்து வெளி உலகமே தெரியாமல் வளர்ந்ததையும், அங்கு நடைபெறும் கொடுமைகளை அதிகாரிகளுக்கு ரகசியமாக எடுத்துச்சொல்லி கொத்தடிமையாக இருந்தவர்களை மீட்டெடுத்ததையும் அப்போது நெகிழ்ச்சியோடு விவரித்தார் பச்சையம்மாள்.

அப்படி கொடுமைப்படுத்திய முதலாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.
தன்னைப் போல் கொத்தடிமைகளாக எங்கெங்கு மக்கள் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு தருவதை தனது லட்சியமாகக் கொண்டு, செயல்பட்டு வருகிற பச்சையம்மாளிடம் விஜய்சேதுபதி, “உங்களுக்கு என்னென்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு, “ஒரு அலுவலகம் போட வேண்டும். அதில் 3 கணினிகள் வேண்டும். ஒரு கார் வாங்கவேண்டும்.” என்றார் பச்சையம்மாள். “கார் எதற்காக?” என்று விஜய்சேதுபதி கேட்டார். “என்னை மாதிரி, பாதித்தவர்களை மீட்பதற்காக… நாங்கள் இப்போது வாடகைக் காரைத்தான் எடுத்துச் செல்கிறோம்.
அதிகமாகச் செலவாகிறது. காரணம் சொன்னால் டாக்சிக்கார்கள் வரவேறு பயப்படுகிறார்கள். அதனால் சொந்தமாக ஒரு கார் இருந்தால் உடனே, பெட்ரோலை போட்டுட்டு நாமே போய் சீக்கிரம் மீட்டு வந்துவிடலாம்” என்றார் பச்சையம்மாள்.

இதைக் கேட்டு நெகிழ்ந்து போன விஜய்சேதுபதி, “பரவாயில்லை, அந்தக் காரை நானே வாங்கித் தருகிறேன். கணினி மற்றும் அலுவலகம் போடுறதுக்கும், நானே பணம் தருகிறேன்.நீங்க தைரியமாப் பண்ணுங்க” என்றார்.

விஜய்சேதுபதி அந்த மேடையிலேயே, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அதைக்கண்டு, அந்தப் பெண் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அடுத்து தனது வாக்குறுதிப்படி கொத்தடிமைகளை மீட்பதற்காக ஒரு சொகுசுக் காரை வாங்கி அதனை கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்திடம் வழங்கினார்.

கல்குவாரியிலிருந்து மீட்கப்பட்ட அந்த நாளை நினைவு கூர்ந்தார் பச்சையம்மாள்..”எங்களை மீட்ட அதிகாரிகள், அன்று எங்கள் அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தார்கள். இன்னும் அந்த பிரியாணியின் சுவை எங்கள் நினைவில் இருக்கிறது. எங்கள் வாழ்வில் சாப்பிட்ட முதல் பிரியாணியும் அதுதான்”

கொத்தடிமையாக இருந்து மீண்ட பச்சையம்மாள் வாழ்வு மாறி இருக்கிறது. இன்னும் எத்தனை பேர் தமக்குத் தெரிந்தே பல்வேறு குவாரிகளில், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களை மீட்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறார்.சர்வதேச நீதி மையம் எனும் அரசு சாரா அமைப்பு பச்சையம்மாளுக்கு சில அடிப்படை பயிற்சிகளை அளித்திருக்கிறது.

அதன்பின், பச்சையம்மாள் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுடன் இணைந்து நூற்றுக்கணக்கான கொத்தடிமைகளை மீட்டிருக்கிறார். அவர்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

பச்சையம்மாள், “2014ஆம் ஆண்டு கொத்தடிமைகளுக்கான மறுவாழ்வு சங்கம்தொடங்கினோம். கொத்தடிமையாக இருப்பவர்களைக் கண்டுபிடிப்பது, கொத்தடிமையாக இருப்பவர்களை அரசாங்கத்தின் துணையுடன் மீட்பது, மீட்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ரேஷன் கார்டு, வீட்டுப்பட்டா உள்ளிட்டவற்றை வாங்கி, மீண்டும் அவர்கள் கொத்தடிமையாக மாறாதவாறு அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகிய நான்கு நோக்கங்களை முதன்மையாக வைத்து சங்கம் செயல்படுகிறது,” என்கிறார்.

அமெரிக்காவில் அண்மையில் அரசு சாரா அமைப்பு ஒருங்கிணைத்தது, ஆளுமைகளுக்கான மாநாடு ஒன்றை. அதில் இந்தியாவிலிருந்து சென்று பங்கேற்று வந்திருக்கிறார் பச்சையம்மாள். இங்கிருந்து அங்கு சென்று வந்த ஒரே பெண்ணும் இவர்தான்!

“எங்களுக்கென ஒரு ஆசை இருக்கிறது. கொத்தடிமையாக நாங்கள் அனுபவித்த துயரங்களை, இனி யாரும்படக் கூடாது. இந்த ஆசைதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது,” என்கிறார் பச்சையம்மாள், இன்று பயமில்லாமல் தைரியமாக!

#பாண்டியன் சுந்தரம் முகநூலில் இருந்து