மற்றொரு சார்லி சாப்ளின் – வடிவேலு

vadi 3
vadi 3

நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.

பாரதிராஜாவின் பழைய படங்களில் காந்திமதியோ, வடிவுக்கரசியோ ஒவ்வொரு காட்சியிலும் பல பழமொழிகளை பொழிந்து தள்ளுவதைப் பார்த்திருப்போம்.

ஆனால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு நாம் நகர, நம்மிடமிருந்து பழமொழிகளும் விடைபெற்றுவிட்டன.

சென்ற தலைமுறைக்காரர்களே இப்போது பழமொழிகளை சொல்வது அரிதாகிவிட்டது. ஆனால், நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.

‘வர்ரும் ஆனா வராது’, ‘வடை போச்சே’, ‘இப்பவே கண்ணைக் கட்டுதே’ என்று வடிவேலுவின் வசனங்கள் பழமொழிகளின் இடங்களை நிரப்பி விட்டன.

தமிழ் சினிமாவில் சாதனையாளர்களைப் பட்டியலிட்டால் 50 பேராவது வருவார்கள். அந்தப் பட்டியலில் வடிவேலுவுக்கும் முக்கியமான இடமுண்டு.

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று வடிவேலுவை ரசிக்காத தமிழர்களே கிடையாது.

சரியாகச் சொல்லப்போனால் இளையராஜாவுக்குப் பிறகு எல்லாத்தரப்பு தமிழர்களாலும் கொண்டாடப்பட்ட ஆளுமை வடிவேலு.

எல்லா மனிதர்களும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், பால் அடையாளத்தின் பெயரால், அரசியலின் பெயரால், பார்க்கும் வேலையின் பெயரால், பதவியின் பெயரால் அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறோம்.

ஆனால், அத்தனையும் உதார் வீரம் என்பதை வெளிப்படையாகப் போட்டுடைத்தன வடிவேலுவின் நகைச்சுவைகள்.

கைப்புள்ள, பேக்கரி வீரபாகு, படித்துறை பாண்டி, நாய் சேகர் முதல் இம்சை அரசன் வரை இந்த உதார் வீரத்தைக் கிண்டலடித்தன.

இது பார்வையாளர்களான தங்களையும் சேர்த்தே கிண்டலடிக்கின்றன என்று தெரிந்துதான் தமிழர்கள் ஆரவாரமாக ரசித்தார்கள்.