பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் பாவம் செய்கிறார்கள் !!

1 facebook
1 facebook

காமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகளாரிடம் வந்து, நபித்தோழர்களெல்லாம் இருக்கும் அந்த சபையிலே பகிரங்கமாக நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்று சொன்ன போது கோபத்தால் நபிகளாரின் முகம் சிவந்தது, எதுவுமே காதில் கேட்காததைப் போன்றே முகத்தை வலப்புறம் திருப்பிக் கொண்டார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள்.

விபச்சாரம் செய்து விட்டு நபிகளாரிடம் வந்து அதனைச் சொல்லி தண்டனை பெற வந்த மாஇஸ் பின் மாலிக் அல் அஸ்லமி (ரழி) அவர்களை நோக்கி நபிகளார் இல்லை நீர் அவ்வாறு செய்திருக்க மாட்டீர் எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரியில் இந்த அறிவிப்பு பதிவாகியுள்ளது)

பெரும் பாவம் செய்து விட்டு செய்த தவறுகளை தாமாகவே ஒப்புக் கொண்டு நபிகளாரிடம் வந்து முறையிட்டதனையே நபிகளார் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்துரைத்து புறக்கணித்தார்கள் என்பது எம் உயிரிலும் மேலான நபிகளாரின் பண்பாடாகும்.

இதுவே நாம் இன்று ஒரு புகைப்படத்தையோ வீடியோ காணொளியையோ வைத்துக் கொண்டு எவ்வளவு ஆபாசமான எடிடிங், அருவருப்பான பேச்சுக்கள், காமக்கதைகள், கீழ்த்தரமான மீம்ஸ்கள்,மட்டரகமான வீடியோ காணொளிகள் என்று எமது சமூக வாழ்க்கையிலும் சமூக வலைத்தளங்களிலும் எவ்வாறு ஒருவரை அசிங்கப்படுத்துகிறோம், இந்த அவலங்கள் எல்லாமே சமூக சீர் திருத்தப் பணி என்ற பெயரிலே நடைபெறுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

பாவத்தை தடுப்பது கடமை, அது குறித்த அந்த பாவத்தை விட பன்மடங்கு பெரிய பாவமான வழிமுறையினால் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது மடமை. அப்படி நினைப்பதானது விபச்சாரத்தை தடுக்க ஆபாச வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டு அக்காணொளிகளை விமர்சிப்பதுக்கு சமமானதாகும்.

தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் தமது நல்லெண்ணத்தை நல்ல வழிமுறைகளை நோக்கியதாக அமைத்துக்கொள்வது மிக அவசியமாகும்.ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாச­லில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ”நிறுத்து, நிறுத்து” என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ”அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்” என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ”பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்” என்று கூறி உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­லிக்(ர­லி) நூல்: முஸ்­லிம் (429)

அறியாமல் தவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இந்த செய்தி எமக்கு எடுத்துக் காட்டுகிறது.

அந்தக் கிராம புறத்து அரபியோ அல்லாஹ்வை வணங்கக்கூடிய முஸ்லிம்களின் புனிதமான இடத்தில் சிறுநீர் கழித்திருந்தும் மக்களுக்கு முன்னால் அவரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி அதனூடக நபிகளார் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, அதற்கு நேர்மாற்றமாக நபியவர்கள் கோபப்படாமல், முகம் சுழிக்காமல் அம் மனிதரோடு மிக அன்பாகவே நடந்து கொண்டார்கள்.

‪முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ‬

‪நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். அதற்கு நான் என்னை என் தாய் இழக்கட்டும்! (அரேபியர்களின் பேச்சு வழக்கு) நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும் (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ் நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை, திட்டவுமில்லை. (மாறாக) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். ‬‪ஆதாரம் – ஸஹீஹ் முஸ்லிம் 935. ‬

‪எடுத்த எடுப்பில் தவறுகளுக்கு தீர்ப்புச் சொல்லி விடாது, தவறுகளை சுட்டிக்காட்டுவதில் கூட அழகிய பண்பாடுகளை நபிகளார் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையினூடாக எமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.‬

நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த சத்திய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச்சொன்ன போது அவர்களை பலரும் சொல்லால் செயலால் துன்புறுத்தினார்கள் அதில் யூதர்களும் அடங்குவர். ஒரு சமயம் யூதர்களில் ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அஸ்ஸலாமு அலைக்க” அதாவது முஹம்மதே! உங்கள் மீது மரணம் உண்டாவதாக! என்று கூறினார்கள். இவர்களுடைய நோக்கம் சலாம் கூறுவதாக இருக்கவில்லை. மாறாக மரணத்தைக் குறித்தே இருந்தது. இவர்கள் கூறிய வார்த்தையைச் செவியுற்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உங்கள் மீது மரணமும், சாபமும் உண்டாவதாக எனக்கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் :- உங்கள்மீது அல்லாஹ்வின் சாபமும், அவனது கோபமும் உண்டாகட்டும் எனக்கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே! கொஞ்சம் பொறுமையாயிருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன், அவன் அனைத்து விடயங்களிலும் மென்மையை (கடைப்பிடிப்பதனையே) விரும்புகின்றான், எனக் கூறினார்கள். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் யூதர்கள் என்ன கூறினார்கள் என்பதை நீங்கள் கேட்கவில்லையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் என்ன கூறினேன் என்பதை நீங்கள் கேட்கவில்லையா? எனக்கூறிவிட்டு, உங்களுக்கும் (அதுபோன்று) உண்டாகட்டும் எனக்கூறினேன். நான் அவர்களுக்காகக் கேட்டது அங்கீகரிக்கப்படும், அவர்கள் எனக்காகக் கேட்டது நிராகரிக்கப்படும் எனக் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா)

நபிகளாரை வேண்டுமென்றே சபித்து அவர்களுக்கெதிராக பிரார்த்தனையும் செய்த யூதர்களின் விடயத்தில் கூட நபிகளார் (ஸல்)

அவர்கள் வரம்பு மீறாது செயற்பட்டார்கள் எனின் பாவங்களை தடுக்கின்றோம் என்ற பெயரில் ஈமான் கொண்ட முஃமின்களின் கண்ணியத்தை சீர்குலைக்க முயற்சிப்பது எவ்வளவு பெரிய கண்டிக்கத்தக்க அம்சம் என்பதனை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவான நமது சமூக வாழ்க்கையிலும் சரி, சமூக வலைத்தள பயன்பாட்டின் போதும் சரி நமக்கு பிடிக்காதவர்களின் மீது அவதூறுகளை பரப்புதல், பெண்களின் படங்களைப் பகிர்ந்து அவர்களை அசிங்கப்படுத்துதல், குறிப்பாக பெண்களின் கற்பு, அவர்களின் எதிர்காலம் அவர்களது மானம் போன்ற விடயங்களில் தேவையில்லாமல் புகுந்து நாம் விளையாடிவிட்டால் குறித்த நபர்கள் எம்மை மன்னிக்காதவரை அல்லாஹ் எங்களை மன்னிப்பதனை அல்லாஹ்வாகிய அவனே அவனுக்கு ஹராமாக்கி விட்டான், என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாவம் செய்தவர்கள் தௌபா செய்து விட்டால் உடனே அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான், அதனை பகிரங்கப்படுத்தி அதனை பலருக்கும் சென்றடையச் செய்தவர்களின் நிலை என்னவாகும் ? அல்லாஹ் தனது திருமறையில் அதற்கான பதிலை இவ்வாறு கூறுகிறான்; “விசுவாசம் கொண்டவர்களுக்கிடையில் இவ்வாறான மானக்கேடான விடயம் பரவ வேண்டும் என விரும்பிகிறார்களோ நிச்சயமாக அத்தகையோருக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரக்கூடிய வேதனை உண்டு.” (அல்குர்ஆன் 24:19)

இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரக்கூடிய வேதனை உண்டு என ஈருலகத்திலும் தண்டிப்பதாக இறைவன் இம்மையையும் மறுமையையும் இணைத்துச் சொல்வதிலிருந்தே இதற்குரிய பயங்கரமான தண்டனையை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பிறரது மானத்தோடும் மரியாதையோடும் சம்பந்தப்படுகின்ற அவதூறுகள், வதந்திகளுக்கு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலிலும் வாட்ஸப்பிலும் நாம் வழங்குகின்ற விருப்புக்குறி என்பது கூட அதற்கு நாம் வழங்குகின்ற (ஷஹாதத்) சாட்சியம் ஆகும். நாம் வழங்குகின்ற சாட்சி பொய்யாயின் அதன் பாவங்களை நாமே சுமந்து கொள்ள வேண்டி வரும்.

மிகப்பெரும் பாவங்களுள் ஒன்றான இந்த பொய் சாட்சியத்தின் பாவம் பேஸ்புக் வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் குறித்த அந்தப் பதிவு உலாவிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வந்து கொண்டே இருக்கும், அந்தப் பதிவை பதிந்தவரோ பரப்பியவரோ தற்சமயம் மரணித்து விட்டால் கூட அவரது பதிவு அங்கு இருக்கும் காலமெல்லாம் அதனை கியாமத் நாள் வரை படிப்பவர்களின் பாவங்களையும் சேர்த்து அவர்கள் கப்றாளியாக இருந்து கொண்டே சுமக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும்.

தவறுகளையும் பாவங்களையும் தடுப்பது எம்மீது எப்படி கடமையோ அதே போன்று தான் அவ்விடயத்தை நபிகளாரின் முன்மாதிரிகளுக்கமைய மிகவும் நுணுக்கமாகவும் நிதானமாகவும் விவேகத்துடனும் தடுப்பதுவும் எம்மீது கடமையாகும்.

Mufaris Thajudeen Rashadi.