ஹர்த்தாலை விரும்புவதில்லை; ஆனால் இம்முறை விரும்பினேன் ஏன்?

தலைவர்களே!

ஹர்த்தாலை கேட்டீர்கள் சில்லறை கடை முதல் மொத்த விற்பனை நிலையம் வரை எதிரொலித்து ஆதரவு தந்தார்கள்.
சந்தைகளும் முற்றாக முடங்கின.
நாள் கூலியாளனும் வீட்டிலே முடங்கினான்.

ஹர்த்தாலை நான் விரும்புவதில்லை ஆனால் இம் முறை விரும்பினேன்.
ஏன் விரும்புவதில்லை:

அரச அலுவலகன் தொழில் பயத்தில் ஒப்பமிட்டும், ஆசிரியர் பாடசாலைக்கு சென்றும், வங்கிகள் திறந்தும், நீதிமன்றங்கள் இயங்கியும் ஹர்த்தால் நடைபெறும் எனில் அதன் பயன் என்ன??

சாமனிய சில்லறை வியாபாரி கடை பூட்டுவதால் அரசோ அல்லது ஆட்சி பீடமோ ஆடப்போவதில்லை. வெறும் பந்தாவாகவே ஹர்த்தால் அமையும்.

இதனால் நான் ஹர்த்தாலை விரும்புவதே இல்லை.

ஆனால் இம்முறை ஏன் விரும்பினேன் என்றால்?
ஒட்டுக் குழு என்றும் துரோகி என்றும் மாறி மாறி குப்பைகளை கொட்டி, அந்த குப்பைகளை மக்கள் மூளையில் பதியப்பண்ணிவிட்டு, 10 கட்சிகள் சேர்ந்து விட்டோம் என ஒரு வேடிக்கை காட்டினீர்களே அதற்காக.

பழைய குப்பைகளை உங்களால் இனி குற்றச்சாட்டு காரணியாக சொல்ல முடியாது.
எதை உங்களுக்குள்ளே புதிய குற்றச்சாட்டாக மாற்ற போகின்றீர்கள்
என்பதை பார்ப்பதற்காகவே ஹர்த்தாலை விரும்பினேன்.

எங்கள் மூளைகள் வெள்ளையானவை நீங்கள் விரும்பும் வர்ணங்களை மெழுகலாம் என நினைப்பது தவறானது.

முக்கியமாக 48கரட் தங்க, கஜேந்திரகுமார் தரப்புக்கு மேற்சொன்னவை பொருந்தவேண்டும்.
மற்றும் படி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் தார்ப்பரியம் புரியாது ஈ.பி.ஆர்.எல்.எவ் முதல் ரெலோ வரை அதே புலிகள் இயக்கத்துக்கு எதிராக போராடிய உங்கள் வஞ்சகம் எமக்கு நன்றாக தெரியும்.

இன்று நீலிக்கண்ணீர் விடும் முதலைகள் அன்று பசி தீர்க்க புலிகளை வேட்டையாடியவையே.

சரி இறுதியாக மக்கள் தேர்தலுக்கு பின்னரும் உங்கள் வீரவசனங்களுக்காக
ஆதரவளித்த கைமாறுக்காக “அரசியல் கைதிகளின் விடுதலைக்காக
ஒரு காத்திரமான நடவடிக்கையை எடுத்துக்காட்டுங்கள் பார்ப்போம்”.
அல்லது வேறு ஏதாவது பொது நிலைப்பாட்டு விடயங்களையாவது
வென்று காட்டுங்களேன்.

இல்லை எனில் மாவீரர் நாள் நெருங்கும் போது நீங்கள் இப்படி ஒரு ஹர்த்தால் அழைப்பை விடுத்தால் மக்கள் கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கர்.

-ரவீந்திரன் கீர்த்தனன்-