“எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை புனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர்.

ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் புனிதமானவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களை நாம் நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.

ஆசிரியர் பணியின் சிறப்பு: இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான முதலாவது தொடர்பு ‘கற்றல் கற்பித்தல்’ நடவடிக்கையில் ஆரம்பிக்கின்றது.

மனித இன வரலாற்றின் உருவாக்கமும் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையின் ஆரம்பமும் ஒன்றாகத் தோற்றம் பெறுகின்றது. இறைவனால் தெரிவுசெய்யப்பட்ட எல்லா தூதர்களும் அவர்களுக்கு அருளப்பட்ட வேத வழிகாட்டலை கட்டளைகளை அவரவர் சமூகங்களுக்குக் கற்பித்தனர்.

ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது. மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு.

வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.

“எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்.
இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.

ஆசிரியரின் தகுதிகள்: இன்றைய இயந்திரதனமான, போட்டிகள் நிறைந்துவிட்ட இவ்வுலகில் ஒரு மாணவனை தலைசிறந்த மாணவனாக மாற்ற ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது.

மாணவர்களுக்கு அன்பான, அழகான முறையில் படிப்பின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கூற வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தனிப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, ஆசை இருக்கும் அதை அந்த மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும். ஒரு மாணவனை ஒழுக்கமுள்ளவனாகவும், நல்ல சிந்தனை உள்ளவனாகவும், கண்ணியமானவனாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்கள் தங்களுடைய அறிவையும், பொன்னான நேரத்தையும், மேலான உழைப்பையும் முதலீடு செய்பவர்களாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தொடர்ந்து தங்களுடைய அறிவை பெருக்குவதில் ஆசிரியர்கள் உந்துசக்தியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முறையான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

இதனை சொல்வதைவிட உணர்வுபூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஆசிரியரின் இன்றைய நிலை: ஆசிரியர்கள் தங்களுடைய இந்த பணியை மிகவும் தியாக உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். மாறாக இன்றைய ஆசிரியர்களில், பெரும்பாலானவர்கள் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தொழிலாகத் தான் கருதுகின்றனர்.

பாடத்திட்டத்தில் சில ஆசிரியர்களுக்கு ஆர்வமற்ற ஆளுமையற்ற சூழல், கற்பித்தல் முறையில் தெளிவின்மை, சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுத்து மந்தமான மாணவர்களை மட்டந்தட்டுவது, தன்னிடம் டியுஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நன்றாக சொல்லிக்கொடுப்பது, சீரற்ற பழக்கவழக்கங்கள் போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மாணவ சமுதாயம் ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களாக உள்ளனர்.

இது மாணவ சமுதாயத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மீதுள்ள நன்மதிப்பை குலைக்கும் விதமாகவும் உள்ளது.

இந்த நிலை தொடருமேயானால் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்கத்தை பேணாதவர்களும் அதிகரித்து நாட்டின் வளர்ச்சி என்பது பாரதூரமான விஷயமாக மாறிவிடும்.

ஆசிரியர் மாணவர் உறவு: ஆசிரியர் மாணவர் உறவு என்பது தாய் மகன் உறவு போன்றது, ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாளோ அதே போன்றதொரு அக்கறையையும் ஆசிரியர்கள் செலுத்தும்போது தான் ஆசிரியர் மாணவர் உறவு என்பது வலுப்பெறும். மேலும் மேம்பட்ட கற்பித்தல் திறனும் ஆசிரியர் மாணவர் உறவுக்கு வலு சேர்க்கும்.

வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மாறாக இன்றைய வகுப்பறைகள் மாணவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் இடமாக காட்சியளிக்கிறது.

அக்கறையற்ற தண்டனைகளால் அன்பு கலந்த கண்டிப்புகள் குறைந்து ஆசிரியர்களை மாணவர்கள் ஒரு எதிரியாக பாவிக்கக்கூடிய சூழல் வளர்ந்து வருகிறது. இதனால் அந்த மாணவன் ஆசிரியரை மட்டும் வெறுக்காமல் அவர் சொல்லிக்கொடுக்கும் பாடத்தையும், பள்ளியையும் வெறுக்கக்கூடிய சூழல்கள் அதிகரிக்கிறது.

மாணவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறிவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.

“ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம் அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே சுழல்கள் இல்லை நாம் தைரியமாக ஆற்றைக் கடக்கலாம் என்றார்.

அந்த நிலையில் அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார்.

அதற்கு அந்த மாணவன் இவ்வாறு பதில் கூறினான் “இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்.” என்றான்.

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

“ஆசிரியரான உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை?” என்ற சிறை அதிகாரியின் கேள்விக்கு “ஆசிரியர் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்று நம்பிக்கையையும், உறுதியையும் முன்மாதிரியாக ஒவ்வொரு ஆசிரியரும் கடைபிடித்து நாளைய சமூகத்தை முன்னேற்றும் பணியில் முதன்மையாக இருக்க வேண்டும்.

எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ஆசிரியர் சமூகம் தங்கள் பணியை திறம்பட செய்து மாணவர் உலகில் மாற்றத்தை கொண்டு வந்து நாளைய எமது ஊரையும், எமது மாணவர்களையும் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க வேண்டும்!!

-எம். முபாரிஸ் மர்சூக்-