புதிய உலக ஒழுங்கு

121707115 3473766816040180 3322208052146930838 n
121707115 3473766816040180 3322208052146930838 n

New Normalcy அதாவது புதிய ஒழுங்கு என்று சொல்லிக்கொள்வோம் மக்களே..பனிப்போர் காலத்தின் பின்வந்த ”புதிய உலக ஒழுங்கு” என்று எடுத்துக்கொள்ளவேண்டாம். அது அரசியல் தளத்தில் நிகழ்ந்த புதிய உலக ஒழுங்கு. உலகமயச்சூழல் அதனையும் அடித்துத் தவிடாக்கிப் சந்துபொந்தெல்லாம் பறக்கவிட்டது. அதாவது உலகத்தை நுண்கிராமமாக்கி அதிகார பலமுள்ள அரசுகளின் விளையாட்டு மைதானமாக்கியது உலகமயம். அதன் விளைவில் ஒன்றுதான் New Normalcy என அறியத்தரப்படும் புதிய வாழ்வொழுங்கு.

இந்தச் சொற்றொடர் மலேசியா பக்கமிருந்துதான் பயன்பாட்டுக்கு வந்தது. அதாவது சர்வதேச தொற்று எனச் சொல்லப்படும் கொவைற் 19 இன் விளைவுதான் New Normalcy. இதில் பிரதானமான நம் வாழ்வொழுக்கப் பண்பாடாக முகக்கவசம் மாறியிருக்கிறது. இதனை நம் சரியாகப் பயன்படுத்துகிறோமா?
இதற்கு முன்பு நாம் பெரியளவில் முகக்கவசம் பயன்படுத்தியதில்லை. மருத்துவமனையில் சேவையாளர்கள் தாண்டி, சமூக வெளியில் படித்த பெரும்புள்ளிகள் நடைப்பயிற்சி போகும்போது முகக்கவசம் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இப்போது முகக் கவசம் அணிவது அவசியமாகியிருக்கிறது.

முகக்கவசத்தை மூக்கு, வாய், தாடை வரை போர்த்தி அணிகிறோம், தாடைக்கு மட்டும் அணிகிறோம், வாய்க்கு மட்டும் அணிகிறோம்,காவல்துறை – இராணுவத்தைக் கண்டால் மட்டும் அணிகிறோம், பொக்கற்றுக்குள் பதுக்கி வைத்துக்கொண்டு பொலிஸாரை – இராணுவத்தைக் கண்டால் மாத்திரம் அணிகிறோம் – என முகக்கவசம் அணிவதிலும் பல வகையறாக்களை நம்முள் சாதி போல பிரித்து வைத்திருக்கிறோம். உண்மையில் முகக்கவசம் அணிதல் என்பது, எனக்கு இருக்கும் தொற்று பிறருக்குப் பரவாமலும், பிறருக்கு இருக்கும் தொற்று எனக்குப் பரவாமலும் இருக்க, மூக்கு, வாய் பகுதிகளை இணைத்து அணிவதாகும். ஆனால் நம்மில் பலர் அதற்கும் சாதிப்பாகுபாட்டை வைத்திருக்கிறோம்.

கொவைற் 19 வைரஸ் தொற்றிலிருந்து KN95 முகக்கவசம், அறுவை சிகிச்சை முகக்கவசம், FFP1 முகக்கவசம்போன்றனவே அதிக பாதுகாப்பைத் தரும் என சொல்லப்படுகின்றது. துணியால் செய்யப்படும் உடனடி முகக்கவசங்கள் வைரஸ் தொற்றைத் தடுக்காது எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. எனவே மேற்குறித்த மூன்று வகை முகக்கவசங்களுக்குள்ளும் நம் போன்ற ஏழை, எளிய மக்களால் பயன்படுத்தக்கூடியது அறுவை சிகிச்சை எனப்படும் ஒருநாள் முகக்கவசம் தான். கோவிட் 19 தொற்றுக்கு முன்னர் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த அந்தவகை முகக்கவசத்தின் தற்போதைய விலை 40 இலிருந்து 50 வரை ஆகின்றது. எனவே இந்த முகக்கவசத்தை ( ஒரு நாள் பயன்படுத்தக்கூடியது) இலங்கை வாழ் மக்கள் அனைவராலும் வாங்கும் பொருளாதார வல்லமை மக்களிடம் இல்லை. அரசு நிவாரணமாக இதனை வழங்க முன்வரவேண்டும். இல்லாவிடின் நைலோன்துணி முகக்கவசங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும். அதுவும் தற்போது நாட்டு மக்கள் முகக்கவசமாகப் பயன்படுத்தும் துவாய், கைக்குட்டை, அடுப்புத்துணி போன்றவற்றுக்கு சந்தையில் அதிக கிராக்கி ஏற்பட்டு, நிர்ணய விலைக்கான வர்த்தமானி அறிவித்தல்கூட வெளியிடும் நிலை தோன்றலாம்.

தற்போது கொடிக்கயிறுகளில் (தோய்த்த துணியைக் காயவிடும் கயிறு) முகக்கவசங்களும் ஏறியிருக்கின்றன. வீடுகளில் நன்றாக அடித்துத் தோய்த்து பிழிந்து காயப்போடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி செய்தால் முகக்கவசத்தில் ஏறியிருக்கும் வைரஸ் எல்லாம் அழிந்துபோய்விடும் என்ற ஒரு கதையை அவிழ்த்துவிட்டவன் ”800” திரைக்கதையை விஜய் சேதுபதிக்கு சொல்வதற்குத் தூண்டியவராகத்தான் இருக்க வாய்ப்புண்டு. முகக்கவசத்தை அணிவது வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெற. அவ்வாறு பயன்படுத்திய முகக்கவசத்தில் தப்பித்தவறி வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அதனை தோய்க்கும்போதோ, தோய்ப்பதற்காகத் தயார்படுத்தும்போதோ வைரஸ் நம்மில் தொற்றும் அபாயம் உள்ளதல்லவா?


இல்லையென்றால் முகக்கவசத்தின் வாய்ப்பகுதியில் ஓட்டைவிழும்வரை தோய்த்துப் பயன்படுத்துவதையும் New Normalcy இற்குள் கொண்டு வருவோம்.

பலருக்குத் தாம் அணிந்த முகக்கவசத்தை கழற்றி எங்கே வைப்பது, என்ன செய்வது என்பதில் தெளிவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்தால் 10 இற்கும் குறையாத பயன்படுத்திய முகக்கவசத்தை வீதி முழுவதும் தெறிக்கவிட்டிருக்கும் நம்மவரைப் பார்க்கலாம். நம் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளப்போகும் மிக முக்கிய கழிவுச் சவால் இது. அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்பதற்கு இணங்க நம் மக்களும் சுற்றுச்சூழலாவது கருங்கூந்தலாவது எனத் திரிகின்றனர்.

முகக்கவசம் அணிந்தபடி கதைக்கும்போது, அதனை மத்தியில் பிடித்துத் தாடை வரை இறக்கிவிட்டுக் கதைத்தபின்னர் மீளவும் இழுத்து மூக்கோடு மாட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் இலங்கைவாழ் பிரஜைகள் கொண்டிருக்கின்றனர். பொதுவாக நம்மில் பலர் கதைக்கும்போது குளிப்பாட்டி – நுரைக்கநுரைக்க சவர்க்காரமிட்டு அனுப்பிவைக்கும் பழக்கமுடையவர்கள். எனவே இப்படி பழக்கமுடையவர்களால் கொரோனாவோ சொரோனாவோ பரவ வாய்ப்பேயில்லை என நம்புவோம்.

இவ்வாறாக New Normalcy இன் மிக முக்கிய பண்பாட்டு விளைவான முகக் கவசங்கள் அணிவதில் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டிய கடப்பாடுடையவர்களாக நாம் உள்ளோம். சமூகப் பரவல் நடக்கவேயில்லை என சத்தியம் செய்திருக்கும் அரசின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம். பதிலிடவேண்டாம். பகிரவேண்டாம். மழை வரக் குணமுள்ளதால் ஓடிப்போய் தோய்த்துப்போட்ட முகக்கவசத்தை எடுத்து வைக்கவும்.

Jera Thampi (ஜெரா)