நாவற்குழி கோழி போட்ட சாபம்!

download 11 5
download 11 5

95 இடப்பெயர்வில் நாங்கள் நாவற்குழியில் தஞ்சமடைந்திருந்தபோது, அந்த வீட்டில் ஏழு குடும்பங்கள் எங்களுக்கு முன்னம் வந்து சேர்ந்திருந்தார்கள். வீட்டு உரிமையாளர் தாராள நெஞ்சுடையவர். எங்களுக்கு கோழிக்கூட்டை தருவதாகச்சொன்னார். எங்களைக்கூட்டிக்கொண்டுபோய் காட்டும்போது இரண்டு கோழி அந்தக்கூட்டுக்குள்ளிருந்து எழுந்தோடியது. ஒரு திமிர்பிடித்த கோழி அப்பாவை பார்த்துக்கூட பயப்படாமல் முழுசிப்பார்த்தபடியிருந்தது. உரிமையாளர் உள்ளே சென்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வெளியே போய்விட்டார்.

அதன்பிறகு, நாங்கள் எல்லோரும் சேர்ந்து கோழிக்கூட்டுக்குள்ளிருந்த கோழிமலம், உமி உட்பட அத்தனை திரவியங்களையும் வெளியேற்றினோம். தூசு தட்டி கூரையையும் சரிப்பண்ணினோம். கோழிப்பேன் இருக்கிறதா என்று அம்மா தனது லேசர் கண்களினால் சல்லடைபோட்டு பார்த்து ‘க்ளியர்’ என்றார். பிறகு, நிலத்துக்கு சாணிபோட்டு மெழுகினார். சைக்கிள் கரியரிலிருந்த பொருட்களை இறக்கிவைப்பதற்குள்
இரவே ஒரு வீடு தயாராகியிருந்தது.

பொருட்கள் வைப்பதற்கும் அருகருகாக படுத்து எழும்புவதற்குமான வீடு எவ்வளவு பருமனில் இருந்தால்போதும் என்பதை அன்றைய இரவு எமக்கு சொல்லித்தந்தது. எந்தச்சிக்கலும் இல்லாமல் காலையில் எழுந்தோம். எல்லோரிலும் பாரபட்சமில்லாமல் சாணி மணம் வீசியது. இருந்தாலும் நாங்கள் உருவாக்கிய வீடு என்ற பெருமை அதைவிட அடர்த்தியான சந்தோஷத்தை தந்தது.

ஆனால், வீடு என்பது உண்மையில் என்ன என்பதை காலையில் தேனீர் குடித்தபிறகு மலம் கழிக்க ஓடித்திரிந்தபோதுதான் தெரிந்தது.

காலையில் எழுந்தபோதிருந்த நிறைவு இப்போது இல்லை. கடுப்பாக இருந்தது. ஏழு குடும்பங்களுக்கு அந்த வீட்டில் இரண்டு மலசல கூடங்கள் இருந்தன. கோழிகளுக்கு ஏன் தனியாக மலசல கூடம் கட்டிக்கொடுக்கவில்லை என்ற பிரச்சினைகளை வீட்டு உரிமையாளரிடம் சென்று வாதம்செய்கின்றளவு பொறுமையும் அப்போதிருக்கவில்லை. ஒரே ஒரு நிம்மதி நாவற்குழியில் நல்ல வயல்வெளிகள் இருந்தன. அதுவும் நாங்களிலிருந்த வீட்டுக்கு பின்னால் பனை வெளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் எமக்கு அமோகமான ஆதரவுத்தளங்களை வழங்கியிருந்தன.

அன்றிலிருந்து நாவற்குழியிலிருந்த – கிட்டத்தட்ட – எல்லா பனைகளுக்கும் எங்களால் பெருமை கிடைத்தது. அவற்றால் எங்களுக்கு முகவரி கிடைத்தது. இப்போதும் என்னுடைய பெயருக்கு c/o என்று முகவரியிட்டு நாவற்குழிக்கு கடிதம் எழுதினால் அந்தப்பனைகளிடம் சென்று சேர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. அவ்வளவுக்கு எனக்கும் அந்தப்பனைகளுக்குமான உறவு ஒழிவு – மறைவில்லாததாக இருந்திருக்கிறது.

இதுபோலவே, குளிப்பதற்கும் வயல்கிணறொன்றை தெரிவுசெய்து அங்கு போய் வருவதுண்டு. காளிகோவில் ஒன்றுடன் சேர்ந்திருந்த பரந்த கிணறு. என்னைப்போலவே பலர் வரிசையில் வந்து அதில் குளிப்பார்கள்.

ஆனால், நான் போகும் நேரம்பார்த்து ஒரு பெண் தவறாமல் குளிப்பதற்கு வருவார். என்னைவிட எப்படியும் இருபது வயது மூத்தவராக காணப்பட்டார். கிணற்றடியில் வந்து உடைமாற்றி குளிக்கும் வழக்கமெல்லாம் அவருக்கில்லை. வீட்டிலிருந்து வரும்போதே குளிப்பதற்கு ஆயத்தமாக கிணற்றடி கொஸ்டியூமுடன்தான் வருவார். அநேகமாக அவரும் நானும் குளிக்கும் நேரத்தில் யாரும் கிணற்றடியிலிருப்பதில்லை. நானோ அவருடன் ஏறெடுத்தும் பேசுவதில்லை. தொடர்ச்சியாக நான் குளிக்கும் நேரத்தில் வந்து, எனது குளிக்கும் உரிமையை சுரண்டுகிறார் என்ற கடுப்போடு அவருடன் கதைப்பதில்லை என்று முடிவெடுத்தேன். அதற்காக, அவர் குளித்து முடிக்கும்வரைக்கும் காத்துக்கொண்டெல்லாமிருப்பதில்லை. அவர் ஒரு வாளி அள்ளிக்குளிப்பார், வாளியை என் பக்கம் வைப்பார். பிறகு நான் ஒரு வாளி குளித்துவிட்டு, வாளியை அவர் பக்கம் தள்ளிவிடுவேன்.

குறுக்கு கட்டிக்கொண்டு அவர் வளைந்து நிமிர்ந்து குளிப்பது, ஸ்டிக்கர்போட்ட ஆனைக்கோட்டை எண்ணைப்போத்தல் குனிந்து எழும்புவதுபோலவே இருக்கும். அவ்வப்போது என் கண் நிமிரவேண்டிய சந்தர்ப்பங்களில், இந்தக்காட்சி தென்படுவதுண்டு. மற்றும்படி, வாளி எனக்கு வருகிறதா என்பதில்தான் என்து கவனமிருந்தது. மொத்தத்தில், அங்கு நின்றுகொண்டிருப்பவர் ஆணோ – பெண்ணோ அதெல்லாம் பிரச்சினையில்லை. எனக்குப்போட்டியாக ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார் என்பது (அந்த வயதில்) எனக்கு எரிச்சிலை ஏற்படுத்தியது.

சோப் போடும்போது, அவரோ நானோ தொடர்ந்து இரண்டு மூன்று வாளிகள் குளிக்கலாம் என்பது பேசாமலேயே இருவரும் எங்களுக்குள் வகுத்துக்கொண்ட விதி. அந்தநேரத்தில், இருவரும் கண்களால் ஒருவித தொடர்பாடலை பரிமாறிக்கொள்ள வேண்டியிருந்தது.

எனது அறிவுக்கு எட்டியவரையில், நான் கண்களால் பேசத்தொடங்கியது அப்போதுதான். அந்த எண்ணைப்போத்தல் அக்காவுக்குத்தான் அந்தப்பெருமை சேரும்.

அந்த திறமையை – புரிந்துணர்வுமிக்க அந்த தொடர்பாடல்முறையை – இன்றைய “மாஸ்க்” யுகத்தில் மீண்டும் பழகவேண்டியிருக்கிறது. எதிர்ப்படும் மனிதர்களின் எண்ணங்களை – ஏவல்களை – கண்களால் அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. வீட்டைவிட்டு வெளியே போறவர்களுக்கு இந்த வித்தை புதிதாக தெரியவேண்டியிருக்கிறது.

இப்போது எண்ணிப்பார்க்கும்போது, இவையெல்லாம் எனக்கு அந்த நாவற்குழி கோழிபோட்ட சாபம்போலத்தான் தெரிகிறது.

ப. தெய்வீகன்