சில பூசைகள், திருவிழாக்கள் ஒரு கோயிலில் நடைபெறுவது போல மற்றைய கோயிலில் நடைபெறுவதில்லை

சைவ ஆலயங்களில் நடைபெறும் பூசைகளில் ஒரு சில பூசைகளை தவிர மிச்ச பூசைகள், திருவிழாக்கள் என்பவை ஒரு கோயிலில் நடைபெறுவது போல மற்றைய கோயிலில் நடைபெறுவதில்லை. ஒவ்வொரு கோயிலுக்கென்றும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்கள், சிறப்பு வழிபாட்டு முறைகள், சிறப்பு திருவிழாக்கள் என்று உண்டு.

கிராமிய கோயில்களில் நடக்கும் வேட்டை திருவிழாக்கள் போல நல்லூர் போன்ற கோயில்களில் நடப்பது இல்லை. கிராமிய கோயில்களில் நடைபெறும் மடை பூசை போல நல்லூர் போன்ற ஆலயங்களில் நடக்கும் பூசைகளில் நடப்பதில்லை. மாவிட்டபுரம் கந்தனில் நடக்கும் கார்த்திகை திருவிழா மாதிரி நல்லூர் போன்ற கோயில்களில் நடப்பதில்லை. அளவெட்டியில் கும்பிளாவளை பிள்ளையார் கோயிலில் நடக்கும் 7ஆம் 8ஆம் பூசைபோல நல்லூர் போன்ற கோயில்களில் நடப்பதில்லை .

அந்த பூசைகளில் நடு இரவில் வான வேடிக்கைகளால் இரவு பகலாக காட்சி தரும் . அந்த இரண்டு பூசை செய்பவர்கள் போட்டி போட்டுகொண்டு லட்சக்கணக்கில் காசை செலவழித்து திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவார்கள்.

இணுவில் சிவகாமி அம்மன் திருவிழா முடிய அதன் பின்னே உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் மடை பூசை நடைபெறும். அதில் மீன் முட்டை போன்றவற்றை சமைத்து படைப்பார்கள். இவ்வாறு நல்லூரில் நடைபெறுவது இல்லை.

ஊரிலுள்ள சில கோயிலில் உள்ள தேரில் ஐயா ஏறி வரமாட்டார். முன்னாலே நடந்தே வருவார். இணுவிலில் உள்ள முருகன் கோயிலில் சூரன் போர் மிக சிறப்பாக செய்வார்கள் . அங்கு நிஜமாகவே சூரன் சண்டை போடுவது போல, சூரனை காவும் இளைஞர்கள் சூரனை ஆட்டுவார்கள். கால் முறிந்து விடுமளவுக்கு, வேகமாக ஓடிவந்து முழங்காலில் முட்டிக்கால் போட்டு இருப்பார்கள். திடீரென்று மிக வேகமாக முரட்டுத்தனமாக ஓடுவார்கள். அது போல் நல்லூரில் நடைபெறுவதில்லை.

தற்போதைய இளைஞர்களில் பலர் திருவிழா என்றால் நல்லூரில் நடப்பது தான் என்று நினைத்து வளர்ந்து விட்டார்கள். அது அவர்கள் தப்பு இல்லை. ஏனெனில் நம்மவர்கள் எல்லாம் எங்கே சனம் கூட போகுதோ அந்த கோயிலுக்கு போவதே சிறப்பானது என்று நினைத்து அங்கே கூட்டிக்கொண்டுபோய் பழக்கிவிட்டார்கள்.
அந்த இளைஞர்களுக்கு கூட்டு பிரார்த்தனை என்றால் என்ன என்று தெரியாது. இப்ப யாராவது கிராமிய கோயிலில் நடைபெறும் கூட்டு பிரார்தனையை வீடியோபண்ணி போட்டால் வியப்புடன் இதென்ன கூத்து? என்று கேட்பார்கள்.

ஐயாவே திருநீறு, சந்தனம் என்று ஒவ்வொன்றாக கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து கொண்டு போவதை யாராவது வீடியோ எடுத்து போட்டால் உதென்ன விசர்க்கூத்து என்று கேட்பார்கள்.

ஐயனார் கோயில்களில் நடக்கும் தீ மிதிப்பை யாராவது வீடியோ எடுத்து போட்டால், உதென்ன விசர் கூத்து?என்றே கேட்பார்கள்.

இதுக்கென்றே விசேடமாக கொண்டு வந்து கொட்டப்படும் மணல்களில், ஈரலிப்பை ஏற்படுத்தி விட்டு அதன் மேல் அடியழிப்பு மற்றும் அங்கபிரதிஷ்டை செய்கிறவர்களை பார்த்த ஆட்களுக்கு வயல் செய்கிற காணிகளை வீதியாக கொண்ட கோயில்களில் நடக்கும் அடியளித்தல், பிரதிஸ்டை செய்கிறவர்களை பார்த்தால் உதென்ன விசர் கூத்து என்றே கேட்க தோன்றும்.

அதே போலதான் அந்த வாழை வெட்டு திருவிழா பார்த்த சிலருக்கு தோன்றுகிறது. பாவம் அவர்கள். தாங்கள் பார்த்தது தான் உலகம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி முள்ளா சாந்தன்
நியூயார்க்.