முதல் துணை ஜனாதிபதி நானாக இருக்கலாம் ஆனால் கடைசிப்பெண்மணி நானில்லை-கமலா ஹரிஸ்

625.0.560.350.160.300.053.800.668.160.90 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 1

துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதல் பெண்மணி நானாக இருக்கலாம் ஆனால் கடைசிப்பெண்மணி நானில்லை என அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்கான உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

காங்கிரஸ் உறுப்பினர் ஜோன் லூவிஸ் தனது மரணத்திற்கு முன்னர் ஜனநாயகம் என்பது ஒரு செயற்பாடு என தெரிவித்தார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின ஜனநாயகம் என்றுமே நிலைக்கும் என்பதற்கான உத்தரவாதமில்லை என தெரிவித்திருந்தார்.

அதற்காக போராடுவதற்காகவும் அதனை பாதுகாப்பதற்காகவும் , நாங்கள் தயராகயிருக்கும் வரையே அமெரிக்காவில் ஜனநாயகம் வலுவானதாக காணப்படும்.அதனை சாதாரண விடயமாக நாங்கள் கருதாதவரை எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு போராடவேண்டும்.அதற்காக தியாகம் செய்யவேண்டும்.அதில் ஒரு மகிழ்ச்சியுள்ளது. அதில் முன்னேற்றமுள்ளது. ஏன் என்றால் மக்களாகிய எங்களிடம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வலுவுள்ளது.

இம்முறை தேர்தலில் ,எங்கள் ஜனநாயகம் வாக்குசீட்டில் காணப்பட்டவேளை, அமெரிக்காவின் ஆன்மாவே கேள்விக்குறியாக காணப்பட்டவேளை உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருந்தவேளை நீங்கள் அமெரிக்காவிற்கான புதிய நாளை உருவாக்கினீர்கள். ஜனநாயக நடைமுறைக்குள் முன்னொரு போதும் இல்லாத பெருமளவான மக்களை கொண்டுவந்து ஈர்த்து வெற்றியை சாத்தியமாக்கியமைக்காக எங்கள் பிரச்சார பணியாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்படுவதை உறுதிசெய்வதற்காக களைப்பற்று பணியாற்றிய நாட்டின் தேர்தல் பணியாளர்களே! எங்கள் ஜனநாயகத்தின் நேர்மையை காப்பாற்றியமைக்காக தேசம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

இந்த அழகான தேசத்தின் அமெரிக்காவின் மக்களுக்கு உங்கள் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். இது மிகவும் சவாலான காலம் என்பது எனக்கு தெரியும்.குறிப்பாக கடந்த பல மாதங்கள் அவ்வாறானதாக காணப்பட்டன. துயரம், வேதனை, வலி, கவலைகள் ,போராட்டங்கள் ஆனால் நாங்கள் உங்களின் துணிச்சல் மீண்டெழுவதற்கான திறன் உங்கள் உணர்வின் தாராள மனப்பான்மை ஆகியவற்றை பார்த்தோம். கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் சமத்துவம் நீதி எங்கள் வாழ்க்கை எங்கள் பூலோகம் ஆகியவற்றிற்காக அணிவகுத்தீர்கள்.

அதன் பின்னர் நீங்கள் வாக்களித்தீர்கள். தெளிவான செய்தியை தெரிவித்தீர்கள். நீங்கள் நம்பிக்கை ஐக்கியம், ஓழுக்கம், விஞ்ஞானம் ,உண்மை ஆகியவற்றை தெரிவுசெய்தீர்கள். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடனை நீங்கள் தெரிவு செய்தீர்கள். பைடன் காயங்களை ஆற்றுபவர், ஐக்கியப்படுத்துபவர்,நன்கு சோதிக்கப்பட்ட நிலையான மனிதர்.

தனிப்பட்ட வாழ்க்கையில் இழப்புகளை சந்தித்த அனுபவம் அவருக்கு வாழ்க்கையில் நோக்கமொன்றை வழங்கியுள்ளது. அது ஒரு தேசமாக எங்கள் நோக்கங்களை மீளப்பெறுவதற்கு உதவக்கூடும்.
நான் இங்கு பிரசன்னமாகியிருப்பதற்கு காரணமான எனது தாயார் சியாமளா கோபாலன் ஹரிசிற்கும் எனது நன்றிகள். அவர் என்றும் எங்கள் இதயத்தில் நிலைத்திருப்பார்.

அவர் 19வயதில் இந்தியாவிலிருந்து வந்தவேளை இந்த தருணத்தை கற்பனை செய்தே பார்த்திருக்கமாட்டார்.
ஆனால் இது சாத்தியமாக கூடிய அமெரிக்கா குறித்து அவர் ஆழமான நம்பிககையை கொண்டிருந்தார்.
நான் அவரை பற்றியும் கறுப்பின பெண்கள் குறித்தும் அவர்களின் தலைமுறைகள் குறித்தும் சிந்தித்து பார்க்கின்றேன். இந்த மகத்தான தருணத்திற்காக வழிகாட்டிய ஆசிய இலத்தீன் அமெரிக்க வெள்ளையின பூர்வீக குடிகளை சேர்ந்த பெண்களை நான் நினைத்துப்பார்க்கின்றேன்.

சமத்துவம்,சுதந்திரம்,அனைவருக்கும் நீதிக்காக போராடி தியாகம் செய்த கறுப்பினப்பெண்கள் உட்பட அனைவரையும் நான் நினைத்துப்பார்க்கின்றேன். கறுப்பினப்பெண்கள் அதிகளவிற்கு அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் கவனிக்கப்படாதவர்கள் ஆனால் எங்கள் ஜனநாயகத்தின் முதுகெலும்புகள்.

ஒரு நூற்றாண்டாக வாக்களிப்பதற்கான உரிமையை பெறுவதற்காக பாதுகாப்பதற்காக 100 வருடங்களுக்கு முன்னர் 19வது திருத்தம் மூலமாக 55 வருடங்களுக்கு வாக்குரிமை சட்டம் மூலம் தற்போது 2020 இல் ஒரு புதிய தலைமுறை பெண்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ளதுடன் தங்கள் வாக்கு செவிமடுக்கப்படவேண்டும் என்ற அடிப்படை உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். இன்று நான் அவர்களின் போராட்டத்தினை பிரதிபலிக்கின்றேன்,அவர்களின் உறுதிப்பாடு,அவர்களின் தொலைநோக்கின் வலிமை ஆகியவற்றை நான் பிரதிபலிக்கின்றேன்,நான் அவர்களின் தோள்களில் ஏறிநிற்கின்றேன்.

இது ஜோவின் குணாதிசயத்திற்காக சான்று.எங்கள் தேசத்தில் காணப்பட்ட மிகப்பெரும் தடையை தகர்த்து தனது துணை ஜனாதிபதியாக பெண்ணொருவரை தெரிவு செய்தமை அவரது துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது. துணைஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதல் பெண்மணி நானாகயிருக்கலாம் ஆனால் கடைசிப்பெண்மணி நானில்லை, ஏனென்றால் இதனை பார்க்கும் ஒவ்வொரு யுவதியும் இது சாத்தியங்கள் உள்ள நாடு என்பதை உணர்கின்றாள். எங்கள் நாட்டின் குழந்தைகளுக்கு நீங்கள் ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரி எங்கள் நாடு தெளிவான செய்தியொன்றை தெரிவித்துள்ளது.

இலட்சியத்துடன் கனவுகாணுங்கள்,உறுதியுடன் வழிநடத்துங்கள் ,மற்றவர்கள் உங்களை பற்றி கருதாதவிதத்தில் உங்களை நீங்கள் பாருங்கள்,ஏனென்றால் அவர்கள் இதற்கு முன் அதனை பார்த்ததில்லை இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் பாராட்டுவோம். அமெரிக்க மக்களே நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது முக்கியமில்லை,ஜோ ஒபாமாவிற்கு எப்படி துணை ஜனாதிபதியாகயிருந்தாரோ அப்படியிருப்பதற்கு நான் முயல்வேன். விசுவாசமாக நேர்மையாக தயாராக ஒவ்வொருநாளும் உங்கள் குடும்பத்தை பற்றி நினைத்துக்கொண்டு துயில் எழுந்து. ஏனென்றால் உண்மையான பணி தற்போதே ஆரம்பமாகின்றது.