விட்டுக்கொடுப்பை செய்து பாருங்கள், உங்கள் குடும்ப வாழ்க்கையின் சந்தோசம் இரட்டிபாகும்.

118964
118964

ஒவ்வொரு நாளும் சமையல், வீட்டு வேலை மட்டும் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்ட பெண். ஒரு நாள் கடவுள் அவளுக்கு அண்ணன் மூலமாக வரம் கொடுக்க நினைத்து, அண்ணாவை அவளிடம் என்ன வேண்டும் என கேட்க சொல்கிறது.

அண்ணனும் கடவுள் விடயத்தைச் சொல்லாமல் உனக்கு என்ன வேண்டுமென தங்கையிடம் கேட்கிறான். அவள் சின்ன சின்ன விடயங்களைக் கேட்க அண்ணனோ பெரிதாக ஏதும் கேளு என்கிறான்.கடைசியில் அவள் ஒரு நாள் லீவு வேண்டும் என்கிறாள்.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சிறந்த காட்சிகளில் இதுவுமொன்று.ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குப் போனாலும், மனைவி காலையில் எழும்பி சமைத்து காலைச்சாப்பாடு கொடுத்து, மதியச்சாப்பாடை பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் கட்டிக்கொடுக்கவேண்டும்.பிறகு வேலை முடிந்து வந்து இரவுச்சாப்பாட்டை சமைக்க வேண்டும்.

இதற்காக மனைவிமாருக்கு உதவி செய்யும் கணவன்மார் எத்தனைபேர்? நமது சமையல் என்பதும் அவ்வளவு இலகுவானதல்ல குறைந்தது மூன்று கறியாவது தேவை.ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் அடுப்படியில் நின்றாக வேண்டும். அதுவும் நமக்கு விதம் விதமாக வேண்டும். ஒரு நாளைக்கு காலையில் தோசை என்றால் இன்னொரு நாள் பிட்டு. மதியத்துக்கு சோறு. பிறகு இரவுக்கு இன்னொரு ஐட்டம்.சமைப்பதை விட சமையல் பாத்திரம் கழுவுவது அடுத்த பெரிய வேலை.நான் இங்கிலாந்திலே வீடுகளுக்கு செல்லும்போது அவதானித்தது, அவர்களின் சமையலறை மிகவும் சிறிதாகவும், எளிமையாகவும் இருக்கும்.

பாத்திரங்களின் எண்ணிக்கையும் சிறிதளவே இருக்கும்.அதற்கான காரணம், அவர்களின் சாப்பாடு மிக எளிமையானது.இரண்டு பாண் துண்டை டோஸ்டரில் வாட்டி எடுத்து, சீஸ் பூசி ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டு ஒருவேளை சாப்பாட்டை முடித்துக்கொள்வார்கள்.

அதாவது ஒரு சில நிமிடங்களிலேயே ஒருவேளை சாப்பாட்டை தயாரித்துக்கொள்வார்கள்.கொஞ்ச இலைகுழைகளை வெட்டிப்போட்டு, அவித்த சிக்கன் துண்டுகளைக் கலந்து கொஞ்சம் மயனைஸ் அல்லது சலட் கிறீம் கலந்தால் அடுத்தவேளை சாப்பாடு ரெடி.என்னோடு வேலை செய்யும் இங்கிலாந்துப் பெண்கள் ஐந்து பேரிடம் வாய்வழியாக கேள்விகேட்டு சின்ன ஆய்வினைச் செய்தேன்.

1. நீங்கள் வேலைக்கு வரும்போது ஒவ்வொரு நாளும் சமைப்பீர்களா?அநேகமான பதில் இல்லை, அது நான் எழும்பும் நேரத்தைப் பொருத்தது.

2. சமைக்கும் நாட்களில் காலை மதிய சாப்பாடு செய்ய எவ்வளவு நேரம் செலவழிப்பீர்கள்?அதிகபட்ச நேரம் 20 நிமிடம் நான் இங்கிலாந்திலே இருந்துகொண்டு அந்த மொக்குத்தனமான மூன்றாவது கேள்வியை கேட்டிருக்ககூடாது.

3.சமைக்காத நாட்களில் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?ஆம் இது ஒரு மொக்குத்தனமான கேள்வி.நமது ஊர் போல இங்கே சாப்பாட்டுக்கடை தேடி அலைய வேண்டியதில்லை.எந்தவொரு சின்ன கடைக்குப் போனாலும் மூன்று வேளைக்குமான ரெடிமேட் சாப்பாடுகள் இருக்கும். அப்படியே சாப்பிடலாம். சிலவற்றை oven யில் சூடாக்கினால் சரி.உதாரணத்துக்கு படத்தைப் பாருங்கள். மெயின்டெயினஸ் பேலியோவுக்கு மாறியபின் ஒரு சிறிய சுப்பர் மாக்கட்டில் வாங்கிய விதவிதமான சோறுகறி. விலையும் அதிகமில்லை. oven யில் வைத்து 2 நிமிசம் சூடாக்கினால் போதும் ஒருவேளை சாப்பாடு சரி.

ஏன் வெளிநாட்டவரை பார்க்க வேண்டும்?சிங்களவரின் சாப்பாட்டு முறையை பாருங்கள், சிவப்பரிசு சோறும் ஒரு கருவாட்டு கறியும் போதும் மூன்றுவேளை சாப்பாட்டையும் கவர் பண்ணி விடுவார்கள்.எமக்கென ஒரு சாப்பாட்டு பாரம்பரியம் உள்ளதுதான். அதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றில்லை. ஆனால் அதையே ஒவ்வொரு நாளும் கட்டிக்கொண்டிருக்கவும் வேண்டியதில்லை.என்ன செய்யலாம்?கணவன் பாத்திரம் கழுவுவது, வெங்காயம் மரக்கறி வெட்டுவது போன்றவற்றில் மனைவிக்கு உதவலாம்.நாளைக்கு சமைக்காத கென்ரீனில் சாப்பிடுவம் என சில நாட்களில் மனைவிக்கு உதவலாம்.

இரவைக்கு சமைக்காத வேலை விட்டு வரும்போது கடையில தோசை வாங்கி வருகிறேன் என மனைவியை சந்தோசப்படுத்தலாம்.எளிமையான சாப்பாட்டு முறைக்கு மாறலாம். உதாரணம் காலையில் பாணும், மதியத்துக்கும் சேர்த்து சமைத்த ஒரு கறியும். மதியத்துக்கு அதே கறியும், சோறும் ஒரு பொரியலும். ஏன் பெண்கள் மட்டும் சமைக்க வேண்டும்?ஆண்களும் சமைக்க பழகலாம்.

சில நாட்களில் மனைவியும், சில நாட்களில் கணவனும் சமைக்கலாம்.எப்போதாவது விடுமுறை நாட்களில் மட்டும் வழமைபோல ஆட்டிறைச்சி விருந்து செய்து சாப்பிடலாம். அதற்காக ஒவ்வொரு விடுமுறையையும் வீணாக்காமல் அவ்வப்போது குடும்பத்தோடு வெளியில் சென்று சாப்பிடலாம்.

இதனால் பெண்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். அவர்களுக்கு பிடித்த ஏதாவதைச் செய்யலாம். கொஞ்சம் அதிகமாக தூங்கலாம். பிள்ளைகளோடு அதிக நேரம் செலவழிக்கலாம்.ஆண்கள் இந்த விட்டுக்கொடுப்பை செய்து பாருங்கள், உங்கள் குடும்ப வாழ்க்கையின் சந்தோசம் இரட்டிபாகும்.

-சிவச்சந்திரன் சிவஞானம்