ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு

6 ff
6 ff

யாழ்ப்பாணத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது.அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெற முடியவில்லை.

யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராச வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது.

கிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது. இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாதராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு பிற்பகல் 2.30 மணியளவில் குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் கமுக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நி​லாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.

‘சிறீலங்காக் கடற்படையின் சுழியோடிகள்’

சிறீலங்காக் கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், அனைத்து புதுமையான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசரியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.

கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டு சென்று ரோபோக்கள் எடுத்த நிழற்படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது.இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

‘அடியில் உள்ள மாட்டு வண்டிகள் ‘

ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணி நேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் பலர் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன.

ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்க முடியும்.

அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத் தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.

‘மற்றொரு மாட்டு வண்டி ‘

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சியின்போதும் மழைக்காலத்தின் போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.

இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது.

சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன.

இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும் போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன.

சுண்ணப் பாறைகள் வன்னிப் பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.

இப்பாறைப் படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது.

இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.

புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக் கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.

இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.

குகை மேலும் மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது.

இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக் கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப் பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

நிலாவரை தொடர்பான கர்ண பரம்பரைக் கதையும் இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்த போது, வானரப் படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று அந்த கர்ண பரம்பரைக்கதை கூறுகிறது.

எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் சொத்தாகும்.