நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

201611241102566896 Digestion of food eaten in three ways SECVPF
201611241102566896 Digestion of food eaten in three ways SECVPF

நாம் வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் தங்கியிருந்தால்தான் கொரோனா வைரஸ் உட்பட எந்த நோயும் எம்மை தாக்காது. வீட்டிலிருக்கும் நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முக்கிய 5 வழிகளை மருத்துவர் அருணாசலம் தெரிவிக்கின்றார். அவர் கூறும் வழிகாட்டல்களை பார்ப்போம்..

8 மணி நேரத் தூக்கம்

நம் இரவுத் தூக்கம் பாதிக்கப்படக் கூடாது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். வீட்டிலிருக்கும் நாள்கள் தானே என்று இரவு தாமதமாகத் தூங்குவது, காலையில் தாமதாக எழுவது இரண்டையும் தவிர்க்க வேண்டும். மனிதன் ஆழ்ந்து உறங்கும்போதுதான் உடலில் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் சைட்டோகின்ஸ் என்ற புரதச்சத்து உற்பத்தியாகும். இரவு நேரத்தில் எளிய உணவுகள், தூங்குவதற்கு முன்பாக கேட்ஜெட் பயன்பாடுகளைத் தவிர்த்தல் ஆகியவை நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

நீர்ச்சத்துள்ள உணவுகள்

தண்ணீரையே குடித்துக்கொண்டிருக்காமல் சமைத்த சோற்றிலிலிருந்து வடித்த கஞ்சித் தண்ணீர், பழைய சாதத்தில் ஊற்றி வைத்த தண்ணீர், நீர் மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களை வெட்டி அப்படியே சாப்பிட வேண்டும். குழந்தைகள் பழங்களை விரும்பிச் சாப்பிடவில்லையென்றால் தேன் கலந்து கொடுக்கலாம்.

உடல் இயக்கம் மிகவும் குறைந்துவிடும் என்பதால் சோறு, இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்கறிகளைச் சமைக்காமல் பச்சையாகவோ, சாலட் செய்து சாப்பிடவோ விரும்புவோர் காய்கறிகளை வாங்கிவந்த பின்னர் 20 நிமிடங்கள் முதல் 2 மணிவரை நேரம் அவற்றை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, கழுவி, உலர வைக்க வேண்டும். அதன் பிறகு அவற்றை பயன்படுத்தலாம். காரமான உணவுகள், பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும். இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு உடலை பலவீனப்படுத்தும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சிதான் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் முக்கிய ஆயுதம். தற்போது உடல் இயக்கம் மிகவும் குறைந்துவிட்ட நாள்கள் என்பதால் தினமும் 2 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு மணி நேரம் உடற்பியிற்சி செய்யாமல், இடையிடையே எழுந்து வராந்தாவில், 10 நிமிடங்கள் நடக்கலாம். காலையில் வெளியில் நடைப்பயிற்சி செய்யவது சிறந்தது.அதற்கு ஏற்ப செயற்படுவது பொருத்தமானது.

நாய், பூனையெல்லாம் இருந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ளும் போது நெளித்துக்கொடுப்பதைப் பார்த்திருப்போம். அதுதான் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி. நாமும் ஓரிடத்திலிருந்து எழுந்து கொள்ளும் போது கைகால்களை மடக்கி நீட்டுவது, குனிந்து பாதங்களைத் தொடுவது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சிக்கான நேரத்தை இது போன்ற ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம் என்பது உடல் நலனும் மனநலனும் இணைந்ததுதான். எப்போதும் நேர்மறை சிந்தனைகளோடு இருப்பது உடலில் ஹேப்பி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் வலுவாக்கும். இதுபோன்ற நேரங்களில் குடும்பத்தினருடன் இணைந்து சந்தோஷமாக நாட்களைக் கழிக்கலாம். வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான நினைவுகளை மீட்டெடுத்து அவற்றைப் பற்றிப் பேசலாம். கொரோனா வைரஸ் பரவிவரும் வேளையில் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு நேர்மறை எண்ணங்களோடு சூழலை அணுகுவோம்!