மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தன்னால் விளையாட முடியும்: ஜேம்ஸ் அண்டர்சன் நம்பிக்கை

james anderson ruled out of ashes 2019 720x450 1
james anderson ruled out of ashes 2019 720x450 1

கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலையில் கிடைத்த ஓய்வை பயன்படுத்தி, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை தன்னால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது நான் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்துவிட்டேன். கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், எனக்குக் கிடைத்துள்ள இந்த கூடுதல் ஓய்வைப் பயன்படுத்தி நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட எனது உடற் தகுதியை மேம்படுத்திக் கொள்வேன். நான் கிரிக்கெட் உலகிற்கு மீண்டும் திரும்பியிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன்.

வலைப் பயிற்சியில் பந்துவீசும் போது அருகில் குறைவான நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இது இன்னும் என்னை நன்றாக உணர வைக்கிறது.
களத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவது துரதிஷ்டமான நிகழ்வு. பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் குளிர்பானம் போல் இருக்கும்” என கூறினார்.

விலா எலும்பு உபாதை காரணமாக கடந்த காலங்களில் எவ்வித டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமல் இருந்த ஜேம்ஸ் அண்டர்சன், எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார்.

37 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.