கொரோனா அச்சுறுத்தலிலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த தயார்: ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு!

images
images

தற்போதய சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம் என ஐக்கிய அரபு அமீரகத்தின் கிரிக்கெட் வாரிய தலைவர் முபாஷீர் உஸ்மானி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுப் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மார்ச் (29) ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை (2020) ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்தோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமீரகத்தின் கிரிக்கெட் வாரிய தலைவரான முபாஷீர் உஸ்மானி, எங்களது நாட்டின் கிரிக்கெட் மைதானங்கள் சர்வதேச போட்டிகளுக்கு பொதுவான இடமாக அமையும், ஏற்கனவே போட்டித் தொடர்களை நடத்திக் காட்டியுள்ளதால் ஐபிஎல் போட்டிகளையும் நடத்த தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக எங்கள் நாட்டில் நடத்தலாம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.