டெஸ்ட் தொடரில் சரியான சுழற்பந்துவீச்சு கூட்டணியை தேர்வு செய்வது இந்தியாவுக்கு கடினம்: இயான் செப்பல்

19IanChappell
19IanChappell

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில், சரியான சுழற்பந்துவீச்சு கூட்டணியை தேர்வு செய்வது இந்திய அணிக்கு தலைவலியாகவே இருக்கும் என அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

இந்த சுற்றுப்பயணமே தற்போது கிரிக்கெட் உலகில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில் இத்தொடர் குறித்து இயான் செப்பல் கூறுகையில்,

‘இந்தியா – அவுஸ்ரேலியா மோதவுள்ள டெஸ்ட் தொடர் கிரிக்கெட் இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்ட்யா விளையாடினால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் சோர்வடையும்போது, அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மீதான அழுத்தத்தை நீடிக்க அவரை பயன்படுத்திக் கொள்ளலாம். அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

அதே சமயம் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் இருந்து சரியான சுழற்பந்துவீச்சு கூட்டணியை தேர்வு செய்வது இந்திய அணிக்கு தலைவலியாகவே இருக்கும். வோர்னர், ஸ்மித், லாபுஷேன் ஆகியோர் அடங்கிய பலம்வாய்ந்த அவுஸ்ரேலியா துடுப்பாட்ட வரிசையை கட்டுப்படுத்துவது இந்திய வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும். பெட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், பேட்டின்சன் என எங்கள் வேகப் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என கூறினார்.

கடந்த 2018-2019ஆம் ஆண்டில் அவுஸ்ரேலிய மண்ணில் முதல்முறையாக, 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை இந்தியா அணி பதிவு செய்தது. இதன்மூலம் அவுஸ்ரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை இந்தியா அணி முத்திரைப் பதித்தது.