லியாண்டர் பயஸின் ஆசை?

unnamed 3 1
unnamed 3 1

100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் விளையாட வேண்டுமென்பதே தனது ஆசை என இந்தியாவின் சிரேஷ்ட டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார்.

46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்திருந்தார். எனினும், தற்போது  கொரோனா வைரஸ் அச்சத்தால், விம்பிள்டன் போட்டி இரத்தானது. இவ்வாண்டு நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு திட்டத்தை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாமா? என்ற யோசனையில் லியாண்டர் பயஸ் உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“ஒலிம்பிக் போட்டிக்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது. இப்போதைக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்குள் மீண்டும் டென்னிஸ் போட்டி ஆரம்பமாகுமா? என்பது சந்தேகம் தான். ஒக்டோபர் அல்லது நவம்பர் ஆகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மறுபடியும் டென்னிஸ் போட்டி ஆரம்பமாகும்போது அதில் விளையாடுவதற்கு என்னை சிறப்பாக தயார்படுத்தி உள்ளேன். 2020 ஆம் ஆண்டு பருவக்காலம் நிறைவடைந்ததும், 2021 ஆம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன்.

நான் இதுவரை 97 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் விளையாடி உள்ளேன். மேலும் 3 தொடர்களில் விளையாடினால் 100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்று இலக்கை எட்டி விடுவேன். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிலும் களமிறங்கினால், ஒலிம்பிக்கில் அதிக தடவைகள் (8 ) பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பை பெறுவேன். இந்த இரண்டையும் செய்ய விரும்புகிறேன். ஒருவேளை அதை எட்ட முடியாமல் போனாலும் கூட, டென்னிஸில் இதுவரை நான் செய்துள்ள சாதனைகளே எனக்கு மகிழ்ச்சி தான்” என்றார்.

1993 ஆம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் லியாண்டர் பயஸ், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.