இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரிலிருந்து இரு முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் விலகல்!

mohammad amir and haris sohail 720x450 1
mohammad amir and haris sohail 720x450 1

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரிலிருந்து இரு முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் விலகியுள்ளனர்.

இதற்கமைய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர் மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான ஹரிஸ் சொஹைல் ஆகியோர் விலகுவதாக நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தனர்.

இதில் மொஹமட் ஆமிர், தனது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹரிஸ் சொஹைல் சொந்தக் காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடருக்காக, இந்த இரு வீரர்களும், இங்கிலாந்து செல்ல மாட்டார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு 28 வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் 14 பணியாளர்களை அனுப்பப்போவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆதரவு பணியாளர்களில் துடுப்பாட்ட பயிற்சியாளராக யூனிஸ் கானும், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக முஷ்டாக் அகமதும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முதுகு உபாதைக்கான சத்திரசிகிச்சை ஒன்றை செய்யத் தவறியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஹஸன் அலி, தனது உபாதைக்காக இன்னும் 5 வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவக் குழுவினரால் பணிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.