இலங்கை- சிம்பாப்வே சுற்றுப்பயணத்தை இரத்துசெய்தது இந்தியக் கிரிக்கெட் அணி!

kohli india759
kohli india759

கொவிட்-19 தொற்றுக் காரணமாக, இரு தரப்பு தொடர்களான இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கான தொடர்களை இரத்து செய்வதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஜூன் 24ஆம் திகதி தொடங்குவதாக இருந்தது.

அதேபோல, சிம்பாப்வே அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஒகஸ்ட் 22ஆம் திகதி தொடங்குவதாக இருந்தது.

இந்தநிலையில் தற்போது இவ் இரு தொடர்களையும் இரத்து செய்வதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க பி.சி.சி.ஐ உறுதியாக உள்ளது. ஆனால் இது மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பல அந்தந்த முகவர்கள் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை பாதிக்கும் எந்தவொரு முடிவிலும் விரைந்து செல்லாது.

இந்திய அரசு வழங்கிய ஆலோசனைகளை அலுவலக பொறுப்பாளர்கள் கவனித்து வருகின்றனர், மேலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற கிரிக்கெட் சபை உறுதிபூண்டுள்ளது. மாறிவரும் நிலைமையை பிசிசிஐ தொடர்ந்து ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒப்பந்த வீரர்கள் வெளியில் பயிற்சிகளை மேற்கொள்வது பாதுகாப்பானது என கருதப்படும் வரை கிரிக்கெட் தொடர் நடைபெறாது என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.