மே. தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியின் 30 பேர் கொண்ட பயிற்சி குழாம் அறிவிப்பு

unnamed 1 5

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட எதிர்பார்க்கப்படுகின்ற, 30 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியின் பயிற்சி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெறவுள்ள இந்த வீரர்களின் விபரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் சபை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சகலதுறை வீரரான மொயின் அலி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதேபோல விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜொன்னி பேயர்ஸ்டோவ்வும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஜோஸ் பட்லர், பென் போக்ஸ் ஆகியோரும் மேலதிக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களாகக் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த கோடைகாலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, குறித்த சுற்றுப்பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், பல புதுமுக வீரர்களுக்கும் இங்கிலாந்தின் பயிற்சிக் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி, இதுவரையில் டெஸ்ட் அறிமுகம் பெறாத 22 வயது துடுப்பாட்டவீரர் டேன் லோரன்ஸ், ஒல்லி ரொபின்சன், ஜேம்ஸ் பிரேசி ஆகிய வீரர்களுக்கும் அமர் வெர்தி, மேட் பாக்கின்ஸன், சகீப் மஹ்மூட், ஜேமி ஒவர்டன், கிரைக் ஒவர்டன், லூயிஸ் கிரேகோரி ஆகியோரும் இத்தொடரின் ஊடாக டெஸ்ட் அறிமுகத்தை பெறவுள்ளனர்.

சரி தற்போது பயிற்சி குழாமின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

மொயின் அலி, ஜேம்ஸ் என்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொன்னி பேயர்ஸ்டோவ், டொமினிக் பெஸ், ஜேம்ஸ் பிரேசி, ஸ்டுவார்ட் ப்ரோட், ரொரி பேன்ஸ், ஜோஸ் பட்லர், ஷேக் கிராவ்லி, சேம் கர்ரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், லூயிஸ் கிரகரி, கீட்டோன் ஜென்னிங்ஸ், டேன் லோரன்ஸ், ஜேக் லீச், சகீப் மஹ்மூட், கிரைக் ஒவர்டன், ஜேமி ஒவர்டன், மேட் பார்கின்ஸன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், ஜோ ரூட், டோம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், அமர் வெர்தி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

ஜூலை மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின் பின்னர், இங்கிலாந்து அணியின் இறுதிப் பதினொருவர் உறுதிசெய்யப்படும்.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஜூலை மாதம் 07ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் போல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.