வீசும் காற்றிலும் விஷத்தைக் கலந்த இலங்கை அரசு: தீபச்செல்வன்

mulli
mulli

காற்று மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. மனித உடலின் காற்று நின்றுபோகும்போது மனித உடல் செயலிழக்கிறது. காற்றுத்தான் மனித உயிர். காற்றுத்தான் இந்த உலகத்தை இயக்குகிறது.

காற்றில்லாத பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாது. காற்று இயற்கையானது. மனிதர்களால் படைக்க முடியாத ஒன்று. ஆனால் மனிதர்களால் காற்றை நன்றாக அழிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இப் பூமியில் இயற்கையாக உயிரிகளுக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் அழித்து பணத்துக்கு வாங்கும் நிலையை உருவாக்கிவிட்ட மனித சமூகம் இப்போது காற்றையும் பணத்திற்கு வாங்கத் துவங்கிவிட்டது.

ஜூன் 15 உலக காற்று தினமாகும். ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் இந்த தினத்தை ஒழுங்குபடுத்தி இயக்கி வருகிறது. உண்மையில் இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும்விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனாலும் மனிதர்களாகிய நாம் காற்றைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறோம். நொடிக்கு நொடி காற்றை மாசுபடுத்தி அதனை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

காற்று இல்லையென்றால் நாம் இல்லை என்பதை அறியாமல் இருக்கிறோம். காற்று இருந்தால்தான் மரங்கள் அசையும். மழை பெய்யும். இப் பூமியில் எல்லாமே காற்றின் அசைவில் இருந்தே துவங்குகிறது. ஆனால் மனதனின் வாழ்க்கை, அன்றாடச் செயற்பாடுகள், தொழில், பொழுதுபோக்கு என்று யாவுமே காற்றை மாசுபடுத்தும் விதமாகவே இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் காற்றின் தரம் குறைந்து வருகின்றது. காற்றின் தரம் குறைந்தால் மனித சமூகங்கள் மாத்திரமின்றி உயிர்கோளமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

உலகில் காற்று தரம் குறைந்த முதல் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகளவில் காற்று மாசடையும் 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக  IQAir AirVisual இன் 2019 உலக காற்று தர அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவும் காற்றின் தரம் குறைந்த நிலையில் உள்ள நாடாக இருந்தபோதும் அது தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக IQAir AirVisual அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவின் வட உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான புது டில்லியின் நகரமான காஜியாபாத் உலகின் மிக மோசமான காற்று மாசடைந்து வரும் நகரம் ஆகும்.

அந் நகரத்தின் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 2019 இல் 110.2 ஆக தரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில காலமாக புது டில்லியில் சில பகுதிகளில் காற்றின்  AQI அளவு 800 தாண்டிய நிலையில் காணப்படுகிறது. இது மிகவும் மோசமானதும், அபாயகரமானதும் என்று சுகாதார அமைப்பு சுட்டிகாட்டுகிறது. உலகில் சிறந்த காற்றை கொண்ட நாடுகளின் பட்டியலில் 58ஆவது இடத்தை இலங்கை கொண்டிருக்கிறது. இலங்கையும் காற்றுத் தரவரிசையில் பின்னிலையிலேயே இருக்கிறது.

இலங்கை அரசு நடாத்திய இன அழிப்புப் போரின்போது காற்றில் நஞ்சைக் கலந்து மக்களை இனக்கொலை செய்யும் உபாயமும் பயன்படுத்தப்பட்டது. உணவை தடுத்து, மருந்தை தடுத்து மக்களை கொலை செய்த இலங்கை அரசாங்கம், வீசும் மூச்சுக் காற்றில் விஷத்தை கலந்தும் படுகொலை செய்தது. அத்துடன் நஞ்சுக் குண்டுகளை வீசி காற்றில் கொடூரத்தை ஏற்படுத்தியது. உலகின் மிக மோசமான யுத்த அணுகுமுறையாக இது கருதப்படுகிறது. இதனால் போர்க்களத்தில் இருந்த அப்பாவி மக்கள், அப்பாவிக் குழந்தைகள் உயிருடன் உடலும் கருகி அழிக்கப்பட்டனர்.

உலகில் உள்ள நாடுகளின் அரசுகள் காற்றை மாசுபடுத்தாமல், அதனை பாதுகாக்க செயற்படும். ஆனால் இலங்கை அரசு காற்றில் விசத்தை கலந்து தனது குடிமக்களை படுகொலை செய்தது. உலகில் எந்தவொரு அரசும் தனது குடிமக்களை இப்படி செய்வதில்லை. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. யூதர்களை இன அழிப்பு செய்த நாஸிகள், விச வாயுவை செலுத்தி அந்த மக்களை படுகொலை செய்தமையை வரலாற்றில் அறிந்திருக்கிறோம். அதற்குப் பின்னர் இலங்கையில்தான் இப்படுபாதகம் நடந்தேறியுள்ளது.

காற்று தரம் குறைந்தால் பல விளைவுகள் ஏற்படும். சாதாரணமாகவே காற்று மாசுபடுவதனால், புற்று நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படும். அத்துடன் நுரையீரல், சுவாசப்பை, இதயம் போன்ற மனிதனின் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. இப்படியிருக்க வன்னியில் அன்றைக்கு வீசிய நஞ்சுக் குண்டுகளும் விஷ வாயுக்களுக்கள் வெறுமனே அந்த யுத்த களத்தில் மாத்திரம் மக்களை கொன்றுவிடவில்லை. இன்றும் நின்று கொல்கிறது.

போருக்குப் பிறகு, வன்னியில் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. அத்துடன் பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. தரம் ஒன்றில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் வீழ்ச்சியை காட்டி வருகின்றது. பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எமது இனத்திற்கு இது பெரும் வீழ்ச்சியாகும். அறியப்படாத மரணங்களும் சுவாச நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, சுவாச நோய்கள் என்பன அதிகரித்துள்ளன. யுத்தம் முடிந்த தருவாயிலேயே மருத்துவர் யமுனானந்தா இதனை எச்சரித்திருந்தார். ஈழத் தமிழர்கள் விசக் குண்டுகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக கூறினார்.

போர் நடந்த மண்ணில் மனிதர்களை மாத்திரமின்றி பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடிகளையும் இது கடுமையாக பாதித்துள்ளது. அண்மைய காலத்தில் கொரோனாவால் தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பதனாலும் மனித செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதனாலும் காற்றின் தரம் அதிகரித்து வருகின்றது. முழுக்க முழுக்க இயற்கைக்குள் காற்றுக்கும் எதிரான செயற்பாடுகளினால்தான் மனித வாழ்க்கை வடிவமைக்கப்பட்டிருப்பதை கொரோனா ஊரடங்கு உணர்த்துகிறது.

AQI   உடல்நல பாதிப்புகள்

நல்ல காற்று –  குறைந்த பாதிப்பு

திருப்திகரமான காற்று – எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.

மிதமான மாசுக் காற்று –நுரையீரல் நோய் (ஆஸ்துமா), இருதய நோய் கொண்டவர்களுக்கும், மேலும் சிறார் மற்றும் முதியோர்களுக்கும் மூச்சு விடுவதில் கோளாறு ஏற்படுத்தும்.

மோசமான காற்று –    மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு கோளாறும், ஏற்கனவே இருதய நோய் உடையோருக்கு அதிக கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

மிக மோசமான காற்று-       மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும், மேலும் இருதய, நுரையீரல் நோய் உடையவர்களுக்கு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கடுமையான நிலை – நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்புண்டு, மேலும் நுரையீரல்/இருதய நோய் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

காற்றின் திறனை, காற்றின் சக்தியை நாம் சரிவர பயன்படுத்த வேண்டும். காற்றின் தரச்சுட்டெண்ணை மேம்படுத்தும் விதமாக மனித வாழ்க்கையை அமைத்தல் வேண்டும். ஒரு காலத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கவில்லை. இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். மின் விசிறிகளும் குளிரூட்டிகளும் பெருகிகிக் கொண்டிருக்கின்றன. பூமிக்கும் உயிர்க்கோளத்திற்கும் காற்றுக்கும் இயற்கைக்கும் எதிரான மனித செயல்கள் தொடர்ந்தால் காற்றையும் பைகளில் விலை கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும்.

-கவிஞர் தீபச்செல்வன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)