சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே! நீங்களும் சுயநல அரசியலிலா?

suresh
suresh

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழைத்து வரும் துரோகங்கள் தமிழ் மக்களை பெரிதும் வாட்டுகின்றது. கூட்டமைப்பின் சுய நல அரசியலால் கடந்த பத்தாண்டுகளாக நாம் பெரும் பின்னடைவுகளையும் வீழ்ச்சிகளையும் சந்தித்து வருகின்றாம். வெறுமனே பாராளுமன்ற பதவியையும் அதை மையப்படுத்திய சுகபோகங்களுக்கும் மாத்திரம் இயங்கும் கூட்டமைப்பு அதற்காக விலைபோன நிலையில் தான் மாற்றுத் தலைமை ஒன்று தேவை என்பது உணரப்பட்டமை தாங்கள் அறிந்ததே.

இந்த நிலையில், கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழினத்தின் உரிமைக்கும் கடந்த கால விடுதலைப் போராட்டத்திற்கும் நேர்மையாக இருப்பவர்கள் ஒரு மாற்றுத் தலைமையாக முன்னாள் வடக்கு முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரன் அவர்களின் அணியில் திரண்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் மக்கள் விரோத அரசியலை செய்து வரும் கூட்டமைப்புக்கு இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் தக்கவொரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்பதே காலத் தேவை என்பதை அறிவீர்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கப்பட்ட தாங்கள், தமிழ் மக்களின் அரசியல் சூழலில் கூட்டணியாக ஒன்றினைவதன் கால அவசியத்தை நன்கு உணர்ந்தவர். ஜனநாயக சூழலில் தமிழ் தேசிய நீக்கம் செய்யும் கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிராக மாற்றுத் தலைமையாகவும் கூட்டணியாகவும் ஒன்றுபட்டு புதிய அரசியலை வென்றெடுப்பது இன்றைய பெரும் தேவையாகும். காலம் வழங்கியுள்ள இந்தப் பணியை தன்னலம் பாராமல் இன நலம் கொண்டு முன்னெடுப்பது தங்களதும் கடமை ஆகும்.

தாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரங்களிலும் தங்கள் முகநூல் பிரசாரப் பக்கங்களிலும் தங்களின் புகைப்படத்துடன் நீதியரசர் விக்கினேஸ்வரனின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. ஆனால் வாக்களிக்க வேண்டிய வேட்பாளர் இலக்கத்தில் மாத்திரம், தங்களது இலக்கத்தை மாத்திரமே தாங்கள் வெளியிட்டு வருகிறீர்கள். இது விக்கினேஸ்வரனின் முகம் தேவை, ஆனால் அவர் வெல்லக்கூடாது என்பதுபோன்ற தோற்றத்தையல்லவா ஏற்படுத்தும்?

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர்கள், அதாவது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட, நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களின் படத்தை வெளியிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வென்றுவிட்டு பின்னர் அவருக்கு எதிராக செயற்பட்டுள்ளனர். சுயலவாதிகள் இப்படித்தான் செய்வார்கள்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அநியாயங்களுக்கு எதிராக நியாயமான விமர்சனங்களை முன் வைக்கும் தாங்களும் இப்படி மக்களுக்கு அதிருப்தியை தருமல்லவா?

தாங்கள் விக்கினேஸ்வரன் அவர்களின் வெற்றி இலக்கத்தை வெளியிடாது விடுவது, நீங்கள் மட்டும் இந்தத் தேர்தலில் வென்றுவிட வேண்டும், விக்கினேஸ்வரன் வெல்லக்கூடாது என்ற சுயநல அரசியலை வளர்ப்பது போன்று ஆகிவிடும். இந்தத் தேர்தலில் விக்கினேஸ்வரன் அவர்களை  முதன்மையாகவும் அதி கூடிய வாக்குகளாலும் வெல்ல வைப்பதே மாற்று அரசியல்மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஏமாற்று அரசியலால் வெறுப்படைந்த மக்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்தும்.

ஏற்கனவே கூட்டமைப்பின் சுயநல அரசியால் தமிழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் சுய நலத்திற்காகவும் பண நலத்திற்காகவும் பொன்னான வாய்ப்புக்களை தவற விட்டுள்ள கூட்டமைப்பு, இப்போது விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையையும் கொச்சைப்படுத்தி அதில் அரசியல் இலாபம் தேடுகின்றது. இந்த சூழலில் இதுபோன்ற அணுகுமுறை மாற்றுத் தலைமையை சுயநலத்திற்காக பலியிடும் பிழையான முன்னூதாரணமாகிவிடும்.

தங்களைப் போலவே சில வேட்பாளர்கள் விக்கினேஸ்வரன் அவர்களின் முகத்தையும் பெயரையும் பயன்படுத்துகின்றனர். அவரின் இலக்கத்தை மாத்திரம் இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். இந்த தன்னலப் போக்கிற்கு எதிராக முன்னூதாரணமாக தாங்கள் செயற்பட வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். விக்கினேஸ்வரன் அவர்கள் தனித்துவமான அரசியல் பயணத்தை தொடங்கியபோது அதில் தாங்களும் உடனிருந்தவர் என்ற வகையில் இதில் தாங்கள் முன்னூதாரமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

உண்மையில் விக்கினேஸ்வரன் அவர்களும் அவர் தலைமையிலான உங்களைப் போன்றவர்களும் இந்த தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறுதல் மிகுந்த அவசியமானது. குறிப்பாக இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுதல், விடுதலைப் போராட்டத்தின் மீதான பற்றுதியை வெளிப்படுத்தல், தன்னாட்சியே தமிழரின் கோரிக்கை என்ற கொள்கைககளின் வெற்றியே விக்கினேஸ்வரனின் வெற்றியாக கருதப்படும். கால நெருக்கடியும் முக்கியத்துவமும் வாய்ந்த இந்த தருணத்தில் மக்களின் உணர்வுக்கும் விருப்புக்கும் ஏற்ப வழிநடப்பதும் செயற்படுவதும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர்களின் தலையாய கடமை என்பதையும் தங்களுக்கு நினைவுபடுத்தி இம் மடலை நிறைவு செய்கிறோம்.

இவ்வண்ணம்

மாற்றுத் தலைமையை விரும்பும் தமிழ்மகன்.