முன்னணி இன்னொரு கூட்டமைப்பு!

kaje sumo
kaje sumo

2009இற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழலில் உருவான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பின் இன்னொரு பிரதியாகவே உருவெடுத்தது. கொள்ளை, கோட்பாடு, வெளிப்பாடு அளவில் கூட்டமைப்பைக் காட்டிலும் மோசமானதொரு அமைப்பாக மக்கள் முன்னணி காணப்படுகின்றது. தமிழர்களின் இனப்பிரச்சினை முதல், சர்வதேச நீதிக்கான செயற்பாடு வரையில் கூட்டமைப்பின் பொய்த்தனமான செயற்பாடுகளை விஞ்சியதாக முன்னணியின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதிலும் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் பொய்யே அடிப்படையாக அமைந்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு மனதின்றிச் செயற்படுகிறதோ அவ்வாறே, இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது தமிழ் தேசிய முன்னணி என்ற கட்சியை பதிவு செய்ய தயங்குகின்றது. தமது பழமைவாத கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதை தவிர, தமிழ் தேசிய கட்சி ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் கூட்டமைப்போலவே முன்னணியிடமும் இல்லை என்பதே கடந்த காலத்தில் உணரப்பட்ட உண்மை. எனவே முன்னணியை தமிழ் காங்கிரஸ் என்று அழைப்பதே பொருத்தமானது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலி நீக்க அரசியலை செய்து வருகின்ற நிலையில், மக்கள் முன்னணி எனப்படும் காங்கிரசும் விடுதலைப் புலிகள் பற்றிய நினைவுகளை அழிக்கும் புலி நீக்க அரசியலை செவ்வனே செய்து வருகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றுகூடி புலிகள் காலத்தில் எவ்வாறு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதோ, அதே மரபுடன் மாவீரர் தினத்தை அனுஷ்த்த வேளையில் முன்னணி, மாவீரர் தினத்தை தியாகியர் தினம் என பெயர் மாற்றுவதாக கூறியது. இன்றுவரையில் அவ்வாவே அழைத்து நினைவுநாள் மேற்கொள்ளப்படுகின்றது. புலிகளின் பெயரால் நிதி சேகரித்துக் கொண்டு புலிகளுக்கு எதிரான வேலையைத்தான் முன்னணி செய்து வருகின்றது.

புலிகள் இயக்கத்திற்காக மாத்திரமின்றி மற்றவர்களுக்காகவும் இந்த நாளை மாற்றுவதாக அக் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பகிரங்கமாக தெரிவித்தார். புலிகளின் அதிகார பூர்வ நினைவு தினமான மாவீரர் தினத்தின் பெயரை மாற்றவும் அதன் அர்தத்த்தை மாற்றவும் கஜேந்திரகுமாருக்கு என்ன அதிகாரமும் தகுதியும் இருக்கிறது? அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளை ஐ.நா அரங்கிலும் வைத்து திரு கஜேந்திரகுமார் கேவலப்படுத்த முயன்றுள்ளார். அதாவது போராட்டத்தில் சேர்பவர்கள் வறுமையின் காரணமாக சேர்பவர்கள் என்றும் ஐந்தாறு பிள்ளைகளை உடைய குடும்பங்களில் சில பிள்ளைகள் உணவின்றி புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர் என்றும் கூறினார்.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்த புலிகளை இவ்வாறு கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் புலி நீக்க அரசியலை தானே செய்கிறார்? அதேபோன்று விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றும் கஜேந்திரகுமார் வாக்குமூலம் அளித்திருப்பது விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுக்கும் செயலல்வா? அத்துடன் புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் பலவந்தமாக இணைக்கப்பட்டனர் என்ற அர்த்த்திலும் கஜேந்திரகுமாரின் வாக்குமூலம் அமைந்ததது. இது விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுக்கும் அரசியல் தானே? விடுதலைப் புலிகள் பற்றிய இந்த கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் கஜேந்திரகுமாரின் பதில்தான் என்ன?

இதேபோன்று அண்மையில் தமிழ் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் காண்டீபன் ஒரு நேர்காணலில் தலைவர் பிரபாகரன் அவர்களை ஒருமையில் அழைத்து பெரும் சிக்கலில் மாட்டியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் மீது உண்மையான பற்று இவர்களுக்கு இல்லை. கஜேந்திரகுமாரைப் போலவே கொழும்பில் இருந்து அரசியலுக்காக இறக்குமதி செய்யப்பட்டவர் காண்டீபன். இவர் இன்னொரு கதையையும் அவிழ்த்து விட்டார். புலிகள் பிரேமதாசாவுடன் டீல் பேசி பணம் பெற்றார்கள். பசில் ராஜபக்சவுடன் டீல் பேசி பணம் பெற்றார்கள் என்றும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் கொச்சைப்படுத்திய பேச்சை எமது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசியலை செய்து வருகின்ற நிலையில், தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்துகின்ற நிலையில், அதேவேளையை தமிழ் காங்கிஸில் உள்ள கஜேந்திரகுமார், காண்டீபன் போன்றவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் காங்கிரஸின் சுமந்திரன்களாகவும் சிறீதரன்களாகவும் வலம் வருகின்ற ஆபத்தை எமது மக்கள் உணர வேண்டும்.

அதேபோன்று திருநெல்வேலியில் தமிழ் அரசியல் தலைமையை ஒன்றுபடுத்த நடந்த கலந்துரையாடலில் ஒற்றுமையை குலைத்து முதலில் எழுந்தவர் கஜேந்திரகுமார். இவருக்கு எப்போதும் தலைவராக இருக்க வேண்டும் என்பதே ஆசை. இதற்காக தேசம் இல்லை, நாடு இல்லை என்று காரணம் கூறிக் கொண்டு பிரிந்துவிடுவார். தனது பாட்டனின் கட்சி படுத்துவிடக்கூடாது என்பதற்காகவே தமிழர்கள் ஒன்றுபடக்கூடிய தருணங்களை எல்லாம் பிரித்தாளுகின்றார். அதே போன்றே விக்கினேஸ்வரன் அவர்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுகின்ற பொன்னான வாய்ப்பினை இழந்து இன்று கேலிக்குள்ளாகியுள்ளார்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)