அரசியலில் முன்னாள் போராளிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?

rooban
rooban

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே தமது ஆதரவு என்று முன்னாள் போராளிகள் ஜனநாயகக் கட்சி என தம்மை அறிவிக்கும் கட்சியொன்று கருத்து கூறியிருந்தது. அதற்குச் சில நாட்களில், மகிந்த – கோட்டா அணியே பெரும் வெற்றியைப் பெறும் என்று இன்னொரு கருத்தை அக் கட்சி கூறியிருக்கிறது. முன்னாள் போராளிகள் ஜனநாயகக் கட்சி என்றால் யார்? அவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் ஏன் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான விடையை அக் கட்சி மேற்குறித்த இரண்டாவது கருத்தின் ஊடாக பதில் அளித்துள்ளது.

கடந்த சில வருடங்களின் முன்னர் தமிழரசுக் கட்சியில் தமக்கு போட்டியிட வாய்ப்பு தருமாறு சில முன்னாள் போராளிகள் கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஆசனத்தை வழங்க தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்திருந்தது. அந்த சூழலில்தான் உண்மையான போராளிகள் எல்லோரும் சைனைட் கடித்து இறந்துவிட்டனர் என்றும் இவர்கள் போராளிகள் அல்ல என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கூறி பெரும் சிக்கலிலும் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் போராளிகள் ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்று தொடங்கப்பட்டது. அக் கட்சி குறித்து மக்களுக்கு ஒரு மயக்கமே இருந்தது. இன்றைக்கு அதற்கான விடைகளை அறிகின்ற காலம் ஒன்று வந்திருக்கிறது. சுமந்திரன் தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்த, சுமந்திரனை சிறீதரன் ஆதரிக்க ஒட்டுமொத்த கூட்டமைப்பையும் முன்னாள் போராளிகள் ஜனநாயக்க கட்சி ஆதரித்திருக்கிறது. சில விடயங்களுக்கு காலமே பதில் சொல்லுவது தான் சிறப்பானதாக அமையும். அதுவே நடந்திருக்கிறது.

உண்மையில் முன்னாள் போராளிகளை அரசியலில் ஈடுபட யார் முட்டுக்கட்டை போட்டவர்கள் என்பதும் முன்னாள் போராளிகளின் பெயரால் யார் அரசியலுக்குள் இழுத்து வரப்படுகின்றனர் என்பதும் உண்மையான முன்னாள் போராளிகளுக்கு என்ன நடக்கிறது என்பதும் இப்போது வெளிச்சம் ஆகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலவந்தமாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார் அனந்தி சசிதரன். எழிலனின் மனைவி என்ற அடையாளத்திற்காக அனுதாப வாக்குகளை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டார்.

அவர் வெளிப்படுத்திய விடுதலைப் புலிகள் குறித்த பற்றுக் கருத்துக்களுக்காகவும் தமிழ் தேசிய உண்மை பற்றினாலும் சுமந்திரன், சிறீதரன் போன்ற கூட்டமைப்பினரின் வெறுப்புக்கு ஆளானார். சிறீதரன் போன்றவர்கள் புலிகளை வைத்து அவர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்வார்கள். ஆனால் முன்னாள் போராளிகளோ, அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அரசியலில் ஈடுபட அனுமதிக்க மாட்டார்கள். அனந்தி விடயத்தில் சிறீதரன் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு நிலையுடன் இருந்தார். போராளிகளோ, அவர்களின் குடும்ப உறவுகளோ அரசியலுக்கு வந்தால் தனது அரசியல் வியாபாரம் படுத்துவிடும் என்ற அச்சம் அவருக்கு!

அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிறீதரன் போன்றவர்கள், தமது தேர்தல் பிரச்சாரத்திற்காக முன்னாள் போராளிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு பிரதேச சபையில் போட்டியிடக்கூட அனுமதிப்பதில்லை. அல்லது கட்சியில் சின்ன பதவிகளை கொடுத்து அவர்களை முடக்கி விடுவார்கள். ஆக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளை கறிவேப்பிலையாக பயன்படுத்தி வருகின்றது. இதனை உணராத முன்னாள் போராளிகளும் சிறீதரன் போன்றோருக்காக மேடையேறி தொண்டை தண்ணி வற்ற கத்திக் கத்தியே மாய்கின்றனர்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திரா ஒரு முதனிலை வேட்பாளராக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியால் இறக்கப்பட்டுள்ளார். முதன் முதலில் கட்சியின் மத்திய குழுவில் முதனிலை பதவியை முன்னாள் போராளிக்கு வழங்கியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராகவும் களமிறக்கியுள்ளது. ரூபன் என்ற பெயரை ஈழத் தமிழ் மக்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.

திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக, தமிழீழ பொருன்மிய மேம்பாட்டுத்துறைப் பொறுப்பாளராக, விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக பொறுப்பாளராக ரூபன் விடுதலைக்கும் இனத்திற்கும் ஆற்றிய பணிகள் சாதாரணமானவையல்ல. இன்றைக்கும் அதே போராளியாக வாழ்ந்து வரும் இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால், அது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்திற்கு வலுச் சேர்க்கும். நரிகளும் நாய்களும் புலிகளாக வேடம் தரிக்க முற்படுகின்ற வேளையில் நாம் ஒரு உண்மையான , மகத்தான போராளிகயை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இந்த தெரிவு அக் கட்சி எத்தனை தெளிவான பயணத்தை தொடங்கியிருக்கிறது என்பதற்குச் சாட்சி. இப்போதே தமிழ் மக்கள் கூட்டணிக்கு முன்னாள் போராளிகள் பலரும் தமது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் காலத்தில் முன்னாள் போராளிகள் பலரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியில் போட்டியிடவுள்ளார்கள். தன்னாட்சி, தற்சார்பு, தாயகம் முதலிய குன்றிடாக் கொள்கைகளுக்காக முன்னாள் போராளிகளின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கு மண்ணில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெறுகின்ற வெற்றி, வரலாற்றில் புதியதொரு சரித்திரமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)