இந்தியா சினிமாப் படங்களில் வருகின்ற காட்சியைப் போல ஒரு சம்பவம் கிளிநொச்சியில் நடந்திருக்கிறது. சிறீதரன் – சந்திரகுமார் ஆதரவாளர்கள் மோதல் என்று ஒரு செய்தி தமிழ் பத்திரிகைகளில் இடம்பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரம் சூடிபிடித்துள்ள நிலையில், சுவரொட்டிகளை ஒட்டும்போது, இரண்டு தரப்புக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மோதல் நிலை ஏற்பட்டதையடுத்து, தடுக்கச் சென்ற பெண் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய ஆதரவாளர்கள் இருவர்மீது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வழக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாம். ஒரு காலத்தில், போர் வெற்றி செய்திகளும், போராளிகளின் அறிவிப்புக்களும் புறப்பட்ட கிளிநொச்சியில் இன்றைக்கு இவர்களின் மோதல் செய்திகள் வெளியாகின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. சிறீதரனுக்கு மாற்று சந்திரகுமாரா? இல்லை இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
அண்மையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சியில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வந்த சந்திரகுமார் ஆதரவாளர்கள், தங்களை விமர்சிக்கக்கூடாது என்றும் தாங்களும் சிறீதரன் தரப்பு போல இல்லை என்றும் கூறி ரகளை செய்துள்ளனர். இணையத்திலும் முகநூலிலும் சிறீதரன் ஆதவராளர்கள் எப்படி ரகளை செய்கின்றனரோ அப்படியே சந்திரகுமார் தரப்பும் செய்திருக்கிறது.
இது மாத்திரமின்றி இவர்களிடையே பல ஒற்றுமைகளை இனம் காண முடியும். சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்வதில் ஒருவரும் ஒரு தரப்பினரே. சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்திப் பேசி அரசியல் செய்கிறார். அதே சாதிய உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தி சந்திரகுமார் குளிர்காய்கின்றார். சிறீதரன் கிளிநொச்சியில் மாத்திரமின்றி போகும் இடங்களில் எல்லாம் பிரதேசவாதம் தூண்ட சந்திரகுமார் கிளிநொச்சியில் பிரதேசவாதம் தூண்டுறார்.
அரச அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களை இடமாற்றம் செய்து மிரட்டு தமது அரசியலுக்காக பயன்படுத்தவதிலும் ஒருவரும் நல்ல ஒற்றுமை உள்ளவர்கள். சிறீதரன் முன்னாள் கல்வியமைச்சர் வாயிலாக அதிபர் இடமாற்றம் செய்துதும் அதை தானே செய்ததாக ஒப்புக்கொண்டதும் ஊடகங்களில் வெளிவந்தது. அதேபோல சந்திரகுமார் அண்மையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் பதவி வந்ததும் அதிபர் இடமாற்றத்தில் தலையிட்டமை ஊடகங்களில் செய்தியாக வந்திருந்தது.
கிளிநொச்சிக்கு சாராயக் கடைகளை கொண்டு வந்ததில் சந்திரகுமாருக்கு பெரும் பங்குள்ளது. அவரது நண்பர்களே கிளிநொச்சியில் மதுவிடுதிகளை நடத்துவதாக அவரின் ஆதரவாளர்களே கூறியுள்ளனர். அதைபோன்றே கிளிநொச்சிக்கு வைன் ஸ்டோர் எனப்படும் மதுக்கடை தேவை என்று சிறீதரன் கிளிநொச்சியில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பேசியதும் ஊடகங்கள் வாயிலாக நன்கு அறியப்பட்ட செய்திகளே ஆகும்.
சர்வதேச விசாரணைக்கு எதிராகவும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சந்திரகுமார் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தினார். அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில் சிறீதரன் தரப்பு போராட்டத்தில் குழப்பம் விளைவித்து சர்வதேச பொறிமுறைகளை கோரும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை திசைதிருப்ப முயன்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்துவதிலும் இருதரப்பும் ஒற்றுமையானவர்கள். சிறீதரன் தற்போது சுமந்திரனை ஆதரிப்பதற்காக புலிகளையும் தலைவரையும் எந்த நிலைக்கும் தள்ளிவிட தயாராக உள்ளார். சந்திரகுமார் மகிந்த மற்றும் கோட்டா தரப்புடன் இணைந்து புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளை செய்தது எல்லோரும் அறிந்ததே.
இவர்கள் இரு தரப்புக்கு பின்னாலும் முன்னாள் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு சிலர் நிற்பதுதான் நல்ல வேடிக்கை. போராட்டத்தை காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் இவர்களின் பின்னே நிற்கும் முன்னாள் போராளிகள் பிணங்களாகத்தான் நிற்கிறார்களா? தயவு செய்து சிந்தித்து உங்களை மாற்றுங்கள். அதுவே உங்கள் கடந்த காலத்திற்கு செய்யும் மரியாதை.
கிளிநொச்சியில் இரண்டு நாட்டாமைகளாக முயற்சிக்கும் இவர்கள், அடிதடி மற்றும் அராஜக அரசியலை முதலீடாக கொண்டுள்ளனர். இதற்கு இவர்கள் செய்யும் வன்முறை சம்பவங்கள் நல்ல உதாரணங்கள். கிளிநொச்சிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த நாட்டாமைகளை இல்லாமல் செய்யும் வகையில் இம்முறை கிளிநொச்சி மக்களின் வாக்களிப்பு இருக்க வேண்டும்? செய்வீர்களா புனித மண்ணின் மக்களே?
பழனிச்சாமி தமிழவன்
(பழனிச்சாமி தமிழவன் என்ற கட்டுரையாளரால் தமிழ்க்குரலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் குறித்த எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)