மனித உரிமைகள் மதிக்கப்படுகிறன்றனவா?

manitham
manitham

டிசம்பர் 10 – இன்று உலக மனித உரிமைகள் தினம். இந்த நாளைக் குறித்து உலகின் தலைவர்கள் பலரும் இன்று பேசுவார்கள். இந்த நாளைப் பிரகடனப்படுத்திய ஐ.நாவும் இந்த நாளைக் குறித்து இன்று பேசக்கூடும். மனித உரிமை பிரகடனம் பற்றியும் இந்த ஆண்டின் குறிக்கோள் குறித்தும் அவர்கள் எடுத்துரைப்பர். அத்துடன் இலங்கையின் அரச தலைவர்களும் இந்த நாளைப் பற்றி இன்றைக்கு பேசுவார்கள். ஆனால் உலகம் எங்கும் மெய்யாகவே இந்த நாளின் அர்த்தம் பேணப்படுகின்றதா என்பதே பெருத்தவொரு கேள்வியாகும்.

ஒரு மனிதனின் அடிடைப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனது உரிமைகளுடன் வாழ்வதே அடிப்படை உரிமையாகும். இன்றைய பூகோள சூழலில் மனிதன் தன் மண் கடந்து தேசம் கடந்தும் வாழ்கின்ற அடிப்படை உரிமையை உலக நாடுகள் பலவும் பின்பற்றுகின்றன. ஒரு மனிதன் தான் வாழ்வது தனது மனித உரிமை என்பதைப்போலவே, பிறரை வாழ அனுமதிப்பதும் சக மனிதனின் உரிமையை மதிக்கும் செயலாகும்.

எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய  சம உரிமையை உடையவர்கள் என்பதையும் பேசுகின்றது.

அண்மையில் இலங்கையில் போரில் இறந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற செயற்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை பாரியதொரு மனித உரிமை மீறல் என்றே சொல்லப்படுகின்றது. இரண்டு தரப்புக்களுக்கு  இடையில் போர் நடந்து, அது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இரு தரப்பு சமூகங்களையும் இணைக்கும் அரசியல் முன்னெடுக்கப்படுவதாக சொல்கின்ற போது ஒரு தரப்புக்கு நினைவுகூரும் உரிமையை மறுதலிப்பது உரிமை மறுப்பாகும்.

இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். இதனை இனத்துவ ரீதியில் ஈழத் தமிழினம் அணுகுவது ஒரு தற்சார்பு நிலையென எதிர்தரப்புக்கள் கூறினாலும், அனைத்துலக பார்வை மட்டத்தில் இங்கே நடக்கும் ஒடுக்குமுறைகள் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் என்ற வகைப்பாட்டில்தான் அடங்கும். இங்கே ஓரிரண்டு மனிதர்களின் உரிமை மீறப்படவில்லை, அல்லது மறுக்கப்படவில்லை. ஒரு இனத்தின் கூட்டு உரிமை மறுக்கப்படுகின்றது.

ஒரு மனிதர் தன் நிலத்தில் வாழ உரித்துடையவர். தன் மொழியை தன் பண்பாட்டை நிகழ்த்தவும் உரித்துக் கொண்டவர்.  பிறரின் சுதந்திரத்தை பாதிக்காத வகையிலும் பிறருக்கு காயத்தை ஏற்படுத்தாத வகையிலும் வாழ்வதை தடுக்க எவருக்கும் உரிமையில்லை. அப்படி தடுத்தால், அது மனித உரிமையின் பாற்படும். அது ஒடுக்குமுறையின் பாற்படும். இலங்கையில் இனத்துடன், மொழியும் பண்பாடும் ஒடுக்கப்படுகின்றது.

அண்மையில் மாவீரர் நாளை அடுத்து வந்தமையை குற்றமாக கற்பனை செய்து கார்த்திகை தீபங்களை அரச படையினர் எட்டி உதைத்து மனித குலத்திற்கு விரோதமான பண்பை வெளிப்படுத்தினர். இதையெல்லாம் சகித்துக்கொள்ளச் சொல்வது என்ன விதமான அணுகுமுறை? இது ஒரு இனத்தின் பண்பாட்டு உரிமைக்கு எதிரான இராணுவச் செயல். போரில் இறந்தவர்களை நினைவுகொள்ள தடை, போரில் மாண்ட புலிகளை நினைவுகொள்ளத் தடை, தம் நிலங்களுக்கு பிரவேசிக்க கடை இதுவெல்லாம் மனித உரிமை மீறல்கள் அல்லவா?

இலங்கையின் மனித உரிமை மீறப்பட்ட சம்பவங்கள் பலவும் நடந்துள்ளதாக சொல்லப்படுகின்றன. 2009 மே மாதம் வரையில் முள்ளிவாய்க்காலில் மிக மோசமாக மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா குறிப்பிட்டது. ஐ.நாவின் இறுதி அறிக்கைகளின் பிரகாரம், மனித உரிமை மீறல் என்பதை தாண்டி போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் ஈழத் தமிழர்கள் தரப்பில் இனப்படுகொலை நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அதற்கான நீதி கோரப்படுகின்றது.

ஆனால் இலங்கை அரச தரப்பை பொறுத்தவரையில், போரில் ஒரு பொதுமக்களைக்கூட கொல்லவில்லை என்று கூறி வந்த நிலையில், அண்மையில் போருடன் தொடர்புடைய இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா, போரின் போது 5ஆயிரம் அல்லது 6 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ‘கைக்கணக்கு’ ஒன்றை கூறுகின்றார். ஐ.நா அறிக்கையில் சுமார் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மக்கள் தரப்பில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இப்போரின் பிறகு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

அவர்களில் கொல்லப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். இறுதிப்போர் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வெளியில் ஊடகங்களால் கொண்டுவரப்பட்டு அவை தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டுள்ளன.  அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களும் அவாவுதல்களும் எழுந்து வருகின்றன.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அரசு மாத்திரமின்றி, ஐ.நா போன்ற அமைப்புக்களும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலையுண்டு. கடந்த காலத்தில் பதவி வகித்த, ஐ.நா செயலாளர், மனித உரிமை ஆணையாளர்கள், போரின் போது மனித உரிமையை காக்கத் தவறியமை குறி்த்து தமது தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆக பொறுப்பான பதவிகளில் உள்ள போது அந்த பதவிகளின் பணிகளை அவர்கள் ஆற்றவில்லை என்பதை தோல்வி அறிக்கைகள் உணர்த்துகின்றன.

இந்த நாளை ஒரு அர்த்தமுடைய நாளாக மாற்ற வேண்டிய பொறுப்பு இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. அதனை மீறுகின்ற போது நாம் எமது எதிர்காலச் சந்ததிக்கு வளமான உலகத்தை கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, மயானங்களையும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளையும் சேமிக்க வேண்டிய நிலை ஏற்படும். இலங்கையில் நடந்த இன உரிமை மறுப்புக்கும் இன அழிப்புக்குமான நீதி என்பது, இலங்கை தமிழர்களுக்கு மாத்திரமல்ல, உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கான உரிமையும் நீதியுமாக இருக்கும்.

-தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.