தமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்!

aaaaa
aaaaa

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தலை’தான் துரோகம் என தமிழ்ப் பழமொழி சொல்கிறது. தன்னலம் அல்லது சுயநலத்திற்கான துரோகங்கள் சமூகத்திற்கு எதிரான துரோகங்களாகத்தான் உருமாறும். இனத்திற்கு எதிராக துரோகம் செய்யபவர்கள், அடுத்தடுத்த கட்டங்களில் தாம் சார்ந்த அமைப்புக்களுக்கும் துரோகம் செய்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்து கடந்த பத்தாண்டுகளில் தமிழினத்திற்கு எதிரான துரோகத்தை அள்ளி நிறைத்த திருவாளர் சுமந்திரன், இப்போது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழரசுக் கட்சியை ‘பலி’யிடத் துணிந்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்வில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்திருக்கிறது. வடக்கு கிழக்கு உள்ளுராட்சி மன்ற சபைகளில் பெரும்பாலானவற்றை தம் வசம் வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைமைக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு யாழ் மாநகர சபையை இழந்தமை மற்றொரு அரசியல் பின்னடைவாக கருதப்படுகின்றது. இந்தப் பின்னடைவுக்கு யார் காரணம்? என்ன காரணம் என்பதை பற்றிய சுயமதிப்பிடல்கள் ஏதுமின்றி, ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி வீசும் இழிவரசியலை துவங்கியுள்ளார் திருவாளர் எம்.ஏ. சுமந்திரன்.

யாழ் மாநாகர சபையின் மேயராக இதுவரை காலமும் இருந்த திரு. ஆனோல்ட் வரவு செலவுத் திட்டத்தை வெல்ல வைக்க முடியாத நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில் புதிய மேயராக மீண்டும் ஆனோல்டையே தெரிவு செய்வதாகவே ஊடகங்களில் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில் யாழ் மாநாக சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி என்பவற்றின் வாக்குகளைப் பெற்று விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போது திருவாளர் சுமந்திரன் எழுதியிருக்கும் கடிதம் யாழ் மாநகர சபை இழப்பை பற்றியது என்பதைவிடவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மீது ‘பழி சுமத்தலையே’ நோக்கமாக கொண்டிருக்கிறது. யாழ் மாநாகர சபை இழப்புடன் நல்லூர் பிரதேச சபையையும் கூட இம்முறை தமிழரசுக் கட்சி இழந்திருக்கிறது. கடந்த காலத்தில் சுமந்தரனின் கவனக் குறைவினால் சில உள்ளுராட்சி மன்றங்களை இழந்தபோது அது குறித்து கவலை கொள்ளாத சுமந்தரனின் இச் சீற்றம் தன் நலத்திற்கானதே.

இந்த நிலையில் யாழ் மாநகர சபையின் மேயராக சொலமன் சூ சிறிலை தாம் பரிந்துரைத்ததாகவும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரையே பரிந்துரைத்ததாகவும் சுமந்திரன் கூறியுள்ளார். அது பொய்யான தகவல் என்றும் சுமந்திரன் மாத்திரமே சொலன் சூ சிறிலின் பெயரை குறிப்பிட்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். யாழ் மாநகர சபையில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16பேருக்கான சந்திப்பின் போது 15பேர் ஆனோல்டின் பெயரையே மீண்டும் பரிந்துரை செய்தாகவும் சொலமன் சூ சிறிலின் பெயரை எவரும் பரிந்துரைக்கவில்லை என்றும் மாவை கூறுகிறார்.

யாழ் மாநகர சபையை மாத்திரமின்றி, கடந்த காலத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல ஆசன இழப்புக்களையும் சந்திப்பதற்கு சுமந்திரனே காரணமாக இருந்தார். தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த எண்ணற்ற துரோகங்களினால் இந்தப் பின்னடைவுகளை தமிழரசுக் கட்சி சந்திக்க நேர்ந்தது. அவை குறித்து பிறிதொரு தருணத்தில் ஆராயலாம். ஆனால் ‘விழுந்த மாட்டிற்கு குறி சுடுகின்ற’ கதையாக யாழ் மாநகர சபை இழப்பை வைத்துக் கொண்டு மாவை சேனாதிராஜா மீது சுமந்திரன் ஏன் ‘பழி’ போடுகிறார்? என்பதை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தலைமைய கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே சுமந்திரன் தனது துரோகங்களை தொடர்கின்றார். அவரை ஆதரித்த ஆனோல்டை இன்று எதிர்க்கிறார். அன்றைக்கு தனக்கு வேண்டியவராக இருந்த ஆனோல்ட் இன்று வேண்டத்தகாதவராக மாற என்ன காரணம்? இப்போது வேறு ஒருவரின் பெயரை கூறி அரசியல் செய்வதன் நோக்கம் என்ன? தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் மாநகர சபையிலும் எழுந்த குழப்பங்களுக்கும் பதவி பறிபோதலுக்கும் சுமந்திரன்தான் காரணம் என்று தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனரே?

‘கண்ணாடி விரியன்’ எனும் கொடிய விசமுள்ள பிடையன் பாம்பு, தீண்டினால் மனித உயிருக்கு பெரிய ஆபத்து. சிலவேளை உயிர் தப்பினால்கூட மரணம் வரை அதன் பாதிப்பு தொடரும் என்பார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலமை இப்போது இப்படித்தான் இருக்கின்றது. ‘கண்ணாடி விரியன்’ என்கின்ற சுமந்திரன், தமிழ் இனத்தையே தீண்டி நாசம் செய்ய முனைகின்ற விசப்பாம்பு. இன்றைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை இந்தளவுக்கு இறங்கு முகத்திற்கு தள்ளிய சுமந்திரன், தமிழரசுக் கட்சியை அடியுடன் அழித்து நாசம் செய்யும்வரை அதன் ஆதரவாளர்கள் காத்திருக்கப் போகின்றனரா?

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்