இலங்கையில் கொரோனா தடுப்பூசி முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக அறுபது வயது கடந்த முதியவர்களுக்கும் பின்னதாக பாடசாலை ஆசிரியர்களுக்கும் படிப்படியாக ஏற்றப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகூட சில மாவட்டங்களில் இன்னும் பூர்த்தியடையாத நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் வவுனியாவில் தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை குறித்து தமிழ்க்குரல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடுகின்ற நடவடிக்கை இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில் அதிபர் ஒருவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டமை தொடர்பில் தமிழ்க்குரல் கேள்வி எழுப்பியிருந்தது.
ஒரு ரூபாவைத் திருடினாலும் திருட்டு, இலட்சம் ரூபாவைத் திருடினாலும் திருட்டு என்பார்கள். ஒட்டுமொத்தமாக பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரும் தடுப்பூசிக்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர் தனது அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டமை ஒரு ஊழல் சார்ந்த நடவடிக்கையாகவும் சுகாதாரப் பணிமணையின் அதிகார துஷ்பிரயோகமாகவும் கருதப்பட வேண்டியது. தடுப்பூசியிலும் ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் செய்வதெல்லாம் அனைத்துலக சுகாதார சட்டங்களின்படி பாரிய குற்றமாகும். இதனை சமூகப் பொறுப்புள்ள ஒரு ஊடகமாக தமிழ்க்குரல் சுட்டிக்காட்டியிருந்தது.
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஊடகங்களுக்கு மிகப் பெரும் அதிகார சக்திகளிடமிருந்து மாத்திரம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதில்லை. அது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்ற கடும்போக்கு வன்முறையாளர்களிடமிருந்தும் ஊடகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் விளைவிக்கப்படுகின்றன. ஊடகம் என்பது எப்போதும் மக்களின் பக்கம் நின்று நீதிக்காக குரல் எழுப்புகின்ற உன்னத செயன்முறை நிறுவனமாகும். அதன் கேள்விகளுக்கு சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த அனைவரும் பதில் அளித்தாக வேண்டும். அதுவே அவர்களின் கடமையும் கண்ணியமுமாக இருக்க வேண்டும். அத்தகைய செயற்பாடுகளின் ஊடாகவே நாட்டை அபிவிருத்திக்கும் நற்தர பண்புக்கும் கொண்டு செல்ல முடியும். இதுவே உலகின் இன்றைய போக்குமாகும்.
தமிழ்க்குரல் ஊடகம் அறத்திற்கு உட்பட்ட வகையில், பெயர் குறிப்பிடாமல் குறித்த அதிபர் தொடர்பான செய்தியை வெளியிட்ட தருணத்தில், வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபரான தனபாலசிங்கம் கந்தையா என்பவர் தனது முகநூலில் மிக மோசமான முறையில் அவதூறுகளை கக்கி உள்ளார். அவர் வெளியிட்ட அவதூறுப் பதிவை வாசகர்களின் கவனத்திற்காக இங்கே வழங்குகிறோம்.
முதலில் ஒழுக்கமும் கண்ணியமும் கொண்டிருக்க வேண்டிய ஒரு பாடசாலைக்கு அதிபராக இருப்பவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? மிகவும் அநாகரிகமான முறையில், அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற இவர், ஒரு பாடசாலைக்கு அதிபராக தலைமை தாங்குகின்ற தகுதியை இழந்து நிற்கின்றார் என்பதை இப் பந்தியை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் உணர்ந்து கொள்வீர்கள். பாடசாலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன் உதாரணமின்றி ஒரு பேட்டை ரௌடியைப் போல வார்த்தைகளை உதிர்க்கும் இவர் ஒரு பாடசாலையின் அதிபர் பதவியில் இருக்க தகுதி அற்றவர். அதனை அவரே தனது வார்தைகள் மற்றும் இத்தகைய அணுகுமுறைகள் வாயிலாக எமக்கு தெளிவான முறையில் உணர்த்தி நிற்கின்றார்.
ஒரு ஊடகம் கேள்வி எழுப்புகின்ற விடயத்தைக் குறித்து கண்ணியமாக அலுவலக ரீதியாக பதில் அளிக்க வேண்டும். இன்றைக்கு நாட்டின் பெரும் பதவிகளில் உள்ளவர்கள், உலகில் பெரும் பதவி நிலைகளில் உள்ளவர்கள் ஒரு நீதிமன்றின் கேள்வியைப் போல ஊடகங்களின் கேள்வியை எதிர்கொண்டு மிக கண்ணியமாக பதில் அளிக்கின்றனர். பொறுப்புடன் நடந்து கொள்ளுகின்றனர். தான்தோன்றித் தனமாகவோ, சமூகப் பொறுப்பின்றியோ உலகின் எந்தப் பிரஜைகளும் இன்று இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் செயலில் இருந்தும் ஒழுக்கத்தில் இருந்துமே நாட்டின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் பண்பும் துவங்குகின்றது.
இந்த நிலையில் நாளை சமூகத்தை உருவாக்குகின்ற அதிபருக்கு இருக்கும் பொறுப்பு என்பது பாரிய அளவிலானது. அளவற்ற, நிகரற்ற அந்தப் பொறுப்பை இழந்த அதிபர் என்பவர் நிச்சயமாக சமூகத்தின் வீழ்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாழாகுவதற்குமே வழி வகுப்பார். ஒரு ஊடகத்திற்கு, வெகுசன வெளியில், சமூக வலைத்தளத்தில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்ளுகின்ற நபர், பாடசாலையில் மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதைக் குறித்தும் தற்போது நாம் கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இங்கே இன்னொரு சந்தேகம் வாசகர்களுக்கு வலுத்திருக்கலாம். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கடுமையான எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன. இவர் படித்துத்தான் இந்தப் பதவிக்கு வந்தாரா? அல்லது குறுக்கு வழியினால், அதிகார செல்வாக்கினால் தடுப்பூசி பெற்றதைப் போலவே அரச உத்தியோகத்தையும் பெற்றாரா? என்கின்ற சந்தேகத்தை எழுத்துப் பிழைகள் பெருகிய இவரது பதிவு எழுப்பியுள்ளது.
இத்தகைய பண்பும் தகுதியும் கொண்டவர்களை அதிபராக நியமித்து பாடசாலைகளை கையளித்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை பழாக்கும் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் கரிசனை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இல்லையேல் வடக்கு மாகாணத்தின் கல்வி இன்னும் சீரழிந்து பாழாகும். இலங்கையில் கல்வி நிலையில் வடக்கு கடைசி இடத்தில் ஏன் நிற்கிறது என்பதற்கும்கூட இவரது பதிவும் வார்த்தைகளும் தெளிவான விடையை அளிக்கிறது.
ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்