திலீபனின் தியாகத்தைப் பின்பற்றுகிறோமா?

Aasiriyar paarvai
Aasiriyar paarvai

அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண, தியாக தீபம் திலீபன் அவர்கள், உண்ணா நோன்பிருந்து உயிரிழக்கவில்லை என்றும் நோயினாலேயே உண்ணா விரதத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும் வரலாற்றுப் பொய் ஒன்றைக் கூறி தமிழ் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மையில் 2009இற்குப் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளை முறியடித்துவிட்டோம் என இலங்கை அரசு சொல்லி வரும் நிலையில், திலீபன் போன்ற உன்னதப் போராளிகளின் பெயர்களை கண்டும் அச்சப்படும் நிலையின் வெளிப்பாடாகவே இத்தகைய பேச்சுக்கள் வெளிவருகின்றன. 

எமது நிலத்தின் பெறுமதியை அதன் அடையாளத்தை அதன் உன்னதத்தை நாம் உணர்ந்துதான் வாழ்கிறோமா என்பதை குறித்து ஒரு சுய விசாரணை செய்யவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஈழ விடுதலை வரலாற்றில் கிளிநொச்சி மண்ணுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. அதற்கு இருக்கும் அடையாளம் உலகப் பிரசித்தமானது. கிளிநொச்சியில் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில், மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு, மாணவர் ஒருவரின் கழுத்தில் காயம் ஏற்பட்ட செய்தியானது, கமால் குணரட்ணவின் பேச்சை விடவும் இந்த மண்ணுக்கு இழுக்கு தரக்கூடியது. நமது மண்ணில் பொறுப்பற்ற கூட்டுச் செயற்பாடுகளின் விளைவாகவே இந்த விடயத்தைக் கருதிக்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் யுவதிகள், சிறுவர்கள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும். நீங்கள் பாடப் புத்தகங்களில் படித்திராத வியப்பும் சாதனையும் உன்னதமும் நிறைந்த வரலாறு நீங்கள் வாழ்கின்ற மண்ணில் நிகழ்ந்திருக்கிறது  என்பதை உணர வேண்டும். அதனை எடுத்துரைக்கிற நிலையில் பெரியவர்களும் அதிகாரிகளும் ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இந்த மண்ணில் இன்றைக்கு பிறக்கிற, வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஒரு மதிப்பும் பணியும் இருக்கிறது. அதற்காக நீங்கள் மலைகளைச் சரிக்க வேண்டியதில்லை. வலிமை மிகுந்த எந்த அம்பையும் வளைக்க வேண்டியதில்லை. வரலாற்றுக்கும் அதன் உன்னதத்திற்கும் ஒத்திசைவான வாழ்க்கையை வாழ வேண்டியது உங்கள் பணி.

33 வருடங்களின் முன்னர், திலீபன் அவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடருகின்ற இளைஞன். அப்போது அவருக்கு 23 வயதுதான். அந்த இளம் வயதில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருக்கிறார் திலீபன். அந்த தருணத்தில்தான் இந்திய இராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்தும் உண்ணா விரதப் போராட்டத்தை தான் மேற்கொள்ள தீர்மானிக்கிறார். ஈழ மக்களின் விடுதலைக்காக தனது உயிரை பணயம் வைத்தவொரு  போராட்டத்திற்கு துணிகிறார்.

இந்த உலகத்தில் உண்ணா விரதப் போராட்டம் என்பது எப்போதும் கேலி நிறைந்த ஒரு முறையாகத்தான் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் இந்த வழிமுறையை ஒரு நாடகமாகவே மேற்கொண்டு வந்தார்கள். உண்ணா விரதப் போராட்டம் இருப்பதும், பின்னர் பழப்பானங்களை குடித்து விட்டு அன்றே மதிய உணவு எடுப்பதும்தான் உண்ணா விரதப் போராட்டம் பற்றிய அனுபவங்கள். தொழிலாளர்கள்கூட ஒரு சில நாள்களில் தமது போராட்டத்தை தீர்வின்றி முடித்த அனுபங்கள் பலவுமுண்டு. ஆனால் திலீபன் அவர்கள், உண்ணா விரதப் போராட்டத்திற்கு உலக அளவில் ஒரு அர்த்தம் உணர்த்திய போராளி.

 இந்திய அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் திலீபன். அவையாவன,

01. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

02. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

03. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

04. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

உண்மையில் இந்தக் கோரிக்கைகள் இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. திலீபன் உயிர் கொடுத்த போராட்டக் கோரிக்கைகளாக இருப்பதனாலும், இன்றுவரை தமிழர்களின் தீரக்கப்படாத பிரச்சினையாக இருப்பதனாலும் இக் கோரிக்கைகள் இன்றும் இலங்கை அரசின் முன்பாகவும் உயிர்ப்புடன் நிற்கின்றன. திலீபன் அவர்கள் பன்னிரு நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, இலங்கை இந்திய அரசுகளினால் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் மெல்ல மெல்ல உருகி தன் உயிரை நீத்தார்.

உலகில் தன் இன உரிமைக்காக உணவருந்த மறுத்து உயிர் நீத்த உன்னதமான தியாகி என அவர் பெயர் பொறிக்கப்பட்டது வரலாற்றில். பசி எவ்வளவு கொடியது என்பதை நமக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. ஒரு பொழுது பசியைக் கூட கடக்க முடியாது. அதன் பின் ஒவ்வொரு நொடியும் அனல் கனக்கும் பெரும் யுகங்கள். ஆனால் அந்தப் பசி வேள்வியை ஒரு இலட்சியத் தீயாக முட்டிய திலீபன், சாதாரண மனிதர்களைப் போன்றவரல்ல என்பதை தன் உன்னத வழியினாலும் போராட்டத்தினாலும் உணர்த்தியவர்.

திலீபன் என்ற வரலாற்று சிறப்புமிக்க பாத்திரம் பற்றி எவர் எப்படி பேசினாலும் அதன் வெளிச்சத்தை நெருங்கவே முடியாது. வரலாற்றின் பிரகாசம் மிக்க தீபமாக அவர் நிலைத்திருக்கிறார். இந்த சூழலில் திலீபன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு மதிப்பளிக்கும் தியாகங்களை உணர்ந்து அதற்கு மதிப்பளித்து, இம் மண்ணின் மனிதர்களாக நாம் வாழ வேண்டும். நடைபவனிகளுக்கும் நினைவு நாட்களுக்கும் அப்பால் நடைமுறை நிஜ வாழ்வில் அவர் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

அத்தகைய புரிதல் உள்ள தலைமுறையை இந்த மண்ணில் வளர்த்தெடுப்பதே நம் ஒவ்வொருவரின் முன்னாலும் இருக்கின்ற கடமை. வரலாற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுவதே எதிர்கால தலைமுறையை ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்ட சமூகமாக வளர்க்கும் கருவியாகும். உண்மையில் தியாக தீபம் திலீபனின்  தியாகத்தை நாம் நினைவுகூர்வது என்பது, அவருடைய தியாகத்தை ஒரு துளியேனும் பின்பற்றுகின்ற மதிப்பளித்தலிலேயே தங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுவோம். 

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்

செம்படம்பர் 15, 2020